Economic Shocks

இலங்கையின் ஏழைகளை வஞ்சிக்கும் அரச கொள்கைகள்!

Sunday Times நாளிதழில் வெளியான இக்கட்டுரை, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் (Emeritus Professor) சிறிமல் அபேரத்ன அவர்களினால் எழுதப்பட்டதாகும். மொழிபெயர்ப்பு:- ச.துலாங்கன்

2000 ஆம் ஆண்டு பிறக்கும் போது, இலங்கையர்களில் நால்வரில் ஒருவர் தேசிய வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வந்தார்கள். காலப்போக்கில் இந்த அளவு படிப்படியாகக் குறைந்து வந்த போதிலும், 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாம் மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வந்து சேர்ந்துள்ளோம். இன்று, நாட்டின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் (25%) மீண்டும் வறுமையின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

உண்மையில், நாட்டில் திடீரென வறுமை தலைதூக்குவதற்கு தொடர்ச்சியான பொருளாதார அதிர்ச்சிகள் வழிவகுத்தன என்பதில் ஐயமில்லை. எனினும், இதன் பின்னாலுள்ள கொள்கைசார் காரணங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாகும். ஏனெனில், அரசாங்கத்தின் கொள்கைத் திசைகளில் ஏற்படும் மாற்றங்கள், வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் உடனடித் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் வறுமை தொடர்வதென்பது வெறும் தற்செயலான நிகழ்வல்ல; அது திட்டமிட்ட கொள்கைசார் தெரிவுகளின் விளைவாகும். இக்கொள்கைகள் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மிக அதிக செலவுமிக்கதாக மாற்றுவதுடன், பாதுகாப்பாக வாழும் ஒரு சிறுபான்மையினரின் சொகுசு வாழ்க்கையை மட்டுமே உறுதி செய்கின்றன.

செலவுமிக்க அடிப்படைத் தேவைகள்

கடந்த வாரம் நாம் விவாதித்த 'Para-வரி' (Para-tariffs) நீக்கம் தொடர்பான கலந்துரையாடலின் அடிப்படையில் நோக்கினால், இலங்கையின் வறுமை என்பது வெறும் சந்தையின் 'தோல்வி' (Market failure) மட்டுமல்ல. மாறாக, இறக்குமதி கட்டுப்பாடுகள், Para-வரிகள் மற்றும் உள்நாட்டு வரிகள் போன்ற கொள்கைகள் மூலம் அடிப்படைப் பொருட்களின் விலைகள் செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பான்மையான மக்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் முதல் கட்டுமானப் பொருட்கள் வரை பரந்துபட்ட வரம்பில் காணப்படும் பாதுகாப்புவாதக் கொள்கைகள் (Protectionist policies), திறந்த சந்தைப் போட்டியை முடக்கி, அதிக விலைக்கு பொருட்கள் விற்பனையாவதை ஊக்குவிக்கின்றன. தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை அடிப்படைத் தேவைகளுக்காகவே செலவிடும் ஏழை மக்களின் குடும்பங்களையே இந்த விலை உயர்வுகள் கடுமையாகப் பாதிக்கின்றன.

இலங்கையர்களில் 75%-க்கும் அதிகமானோர் இன்னும் கிராமப்புறங்களிலேயே வாழ்கின்றனர்; நாட்டின் ஏழை மக்களில் ஐந்தில் நான்கு பங்கினர் (80%) கிராமங்களில்தான் வசிக்கின்றனர். அதுமட்டுமன்றி, நாட்டின் தொழிலாளர் படையில் கால் பகுதியினர் (25%) விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், நாட்டின் ஏழைகளில் பெரும்பான்மையானோர் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத் துறையையே நம்பியுள்ளனர் என்பதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

உணவு, உடை, கட்டுமானப் பொருட்கள் மற்றும் எளிய உற்பத்திப் பொருட்களுக்கு ஏழைகள் தொடர்ந்து அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதால், அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாவதுடன், மிகக்குறைந்த கிராமப்புற வசதிகளுடன் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

அதிக விலைமிக்க உணவு, எட்டாக்கனியாகும் இருப்பிடம்

செஸ் வரி (Cess), ரேட் வரி (PAL), விசேட வர்த்தகப் பண்ட வரி (SCL) மற்றும் VAT போன்ற இறக்குமதி வரிகள் காரணமாக அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பால் பொருட்கள், கோழி இறைச்சி மற்றும் தானியங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அவற்றின் உண்மையான சந்தை மதிப்பை விட மிக அதிகமாகவே தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் இந்த விலைகள் இதைவிடக் குறைவாகவே இருந்திருக்கும்.

அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் போது, ஏழைப் பின்தங்கிய குடும்பங்களுக்கு வேறு வழிகள் இருப்பதில்லை. இதன் விளைவாக, அவர்கள் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளவோ அல்லது ஊட்டச்சத்து குறைந்த மலிவான உணவுகளை நாடவோ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி, உணவு விலை உயர்வு காரணமாக பல குடும்பங்கள் வேளை உணவைத் தவிர்ப்பதுடன், பல சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் பிள்ளைகளுக்கு உணவளித்துவிட்டு தாங்கள் பட்டினியாக இருக்க பழகியுள்ளனர். இதுவொரு தற்காலிகச் சரிக்கட்டல் அல்ல. இது காலப்போக்கில் மந்தபோஷணை, வளர்ச்சிக் குறைபாடு மற்றும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாகும்.

வீடு அல்லது இருப்பிட வசதியைப் பொறுத்தமட்டிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. கொழும்பில் மூன்று அறைகளைக் கொண்ட ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பின் விலையானது, நல்ல ஊதியம் பெறும் ஒரு நிறைவேற்று அதிகாரி (Executive) தனது 25 வருட வருமானத்தை முழுமையாகச் செலவிட்டால் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில் உள்ளது. அதாவது, நடுத்தர வர்க்கத்தினருக்கே ஒரு வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கும் போது, குறைந்த வருமானம் பெறுவோருக்கு அது வெறும் பகற்கனவாகவே கலைந்துவிடுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சிமெந்து, இரும்பு, டைல்ஸ் மற்றும் இயந்திரங்களுக்கான வரிகள் மற்றும் Para-வரிகள் காரணமாக கட்டுமானச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து, வீடமைப்புத் துறையில் பணவீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது பின்னர் வாடகை மற்றும் வீட்டு விலைகளின் உயர்வுக்கு வழிவகுக்கிறது.

நகரங்களில் வேகமாக உருவாகும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை பணக்காரர்களும், புலம்பெயர்ந்தோரும் (Diaspora), வெளிநாட்டினருமே வாங்குகின்றனர். அவர்கள் அவற்றை வசிப்பதற்காக அன்றி, ஒரு முதலீடாகவே கருதுகின்றனர். ஆனால், இந்த உயர்மட்ட சொத்துக்களை லாபகரமான முதலீடுகளாக மாற்றும் தற்போதைய கொள்கைகளும் வரி அமைப்பும், சாதாரண ஊழியர்கள் ஒரு சாதாரண நகர்ப்புற வீட்டைக் கூட வாங்க முடியாத அளவுக்கு விலைகளை உயர்த்தியுள்ளன.

“நகர்ப்புற வாழ்க்கை செலவுமிக்கதாக மாறும் போது, ஏழைகள் தொலைதூரக் கிராமங்களுக்கு விரட்டப்படுகிறார்கள். அங்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டுமன்றி, காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகளிடமிருந்தும் தமது உயிரைப் பாதுகாக்கப் போராட வேண்டியுள்ளது.”

தொழில்மயமாக்கலைத் தவறவிடுதல்

நீங்கள் வாழும் இடமே இறுதியில் உங்கள் வாழ்க்கையின் வாய்ப்புகளைத் தீர்மானிக்கிறது. இதில் அரசாங்கத்தின் கொள்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரி மற்றும் வர்த்தகச் சட்டங்கள் நகர்ப்புற வாழ்க்கையை அதிக செலவுமிக்கதாக மாற்றும் போது, ஏழைகள் சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள நகரங்களை நோக்கி நகர்வது தடுக்கப்படுகிறது.

இதன் விளைவாக, பின்தங்கிய கிராமங்களில் பிறப்பவர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியம் மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட வேலைகளிலேயே முடங்கிப்போகிறார்கள். வளர்ந்து வரும் பொருளாதார மையங்களிலிருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் குழந்தைகளும் இதே வரம்புகளையே எதிர்கொள்ள நேரிடுகிறது.

இலங்கையின் நீடித்த கிராமப்புற வறுமையானது, மெதுவான தொழில்மயமாக்கல் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் உள்ள பலவீனங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. விவசாயத் துறை தொழிலாளர் படையில் 25% பங்கைக் கொண்டிருந்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதன் பங்களிப்பு மிகச் சிறியதே. இதன் காரணமாக, அங்கு உற்பத்தித்திறன் குறைவாகக் காணப்பட்டு, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் குறைந்த வருமானத்தையே பெறுகின்றனர்.

மறுபுறம், கைத்தொழில் மற்றும் நவீன சேவைத் துறைகள் கிராமப்புறங்களிலுள்ள உபரி உழைப்பை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு வேகமாகவோ அல்லது பரந்த அளவிலோ விரிவடையவில்லை. பெரும்பாலும் 'உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தல்' என்ற பெயரில் பாதுகாப்புவாதக் கொள்கைகள் நியாயப்படுத்தப்பட்டாலும், ஏற்றுமதி செய்யக்கூடிய மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய போட்டித்திறன் மிக்க தொழில்களை ஊக்குவிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்குப் பதிலாக, சிறிய உள்நாட்டுச் சந்தையைப் போட்டியிலிருந்து பாதுகாக்கும் வேலைகளே நடக்கின்றன. இது நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அதிகரித்து லாபம் ஈட்டுவதை விட, சந்தையில் ஏற்படும் தட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதையே ஊக்குவிக்கிறது.

இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை உள்ளீடுகளை இறக்குமதி செய்யும் போது அதிக வரிகள் விதிக்கப்படுவதால், முதலீடு, கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான செலவு அதிகரிக்கிறது. இதன் விளைவு துல்லியமானது: தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் சேவை மையங்களும் குறைகின்றன. இதனால், வாழ்வாதார விவசாயம் அல்லது முறைசாரா வேலைகளில் சிக்கி, வேறு துறைகளுக்கு மாற முடியாமல் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாதுகாப்பு யாருக்கு வழங்கப்படுகிறது?

உயர் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், Para-வரிகள் மற்றும் உரிமக் கட்டுப்பாடுகள் (Licensing) பெரும்பாலும் 'விவசாயிகளைப் பாதுகாத்தல்' அல்லது 'உள்நாட்டுத் தொழில்துறையைக் காத்தல்' என்ற பெயரிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் நடைமுறையில், இவை வரையறுக்கப்பட்ட போட்டி மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற முடிவெடுத்தல் மூலம் லாபமடையும் ஒரு சில வர்த்தகர்கள், அரசியல் செல்வாக்குமிக்க தொழிலதிபர்கள் மற்றும் சில இடைத்தரகர்களை மட்டுமே பணக்காரர்களாக்கியுள்ளன.

மோட்டார் வாகனங்கள் முதல் கோழித்தீவனம் வரை, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு முதல் கட்டுமானப் பொருட்கள் வரை, வரிகள் மற்றும் கோட்டாக்களில் (Quotas) ஏற்படும் திடீர் மாற்றங்களால், சரியான நேரத்தில் கையிருப்புகளைக் கொண்டிருப்பவர்கள் அல்லது உரிமம் பெற்றவர்கள் மட்டுமே எதிர்பாராத கொள்ளை லாபத்தை மீண்டும் மீண்டும் பெறுகின்றனர்.

இவற்றுக்கு மத்தியில், 22 மில்லியன் நுகர்வோர் அதிக விலைகளைக் கொடுத்து தங்களின் வாழ்வை இழக்கின்றனர். இந்த 22 மில்லியனுக்குள் ஏழைகளும், வறுமைக்கோட்டிற்கு அண்மையிலுள்ளோரும், மற்றுமொரு பொருளாதார அதிர்ச்சியால் வறுமைக்குள் வீழக் காத்திருப்பவர்களுமே அடங்குவர்.

முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த யதார்த்தத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்:

"இக்கொள்கையானது உள்நாட்டில் இயங்கும் ஒரு சில குடும்ப வணிகங்களைப் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது."

இதற்காக நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையும் நஷ்டஈடு செலுத்த வேண்டிய அவலநிலையே காணப்படுகிறது.

பாதுகாப்புவாதத்தின் அரசியல் பொருளாதாரம் (Political Economy of Protectionism) என்பது இதுதான்: சமூகத்தின் உச்சியிலுள்ள சில பயனாளிகளின் கூட்டமைப்பைப் பேணிக்கொண்டு, சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள மக்களுக்குத் தெரிவுகளையும் வாய்ப்புகளையும் மறுத்து, அவர்களை அதிக விலை நுகர்வுக்குள் அடிமையாக்குவதாகும்.

நாம் சந்தையைத் திறந்தால் என்ன நடக்கும்?

இப்போது இந்த நிலைமையை முற்றிலும் தலைகீழாக மாற்றி சிந்தித்துப் பாருங்கள். கூடுதல் இறக்குமதி வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டால், உணவு, உடை மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை நுகர்வோர் மலிவான விலையில் பெற முடியும். தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை அடிப்படைத் தேவைகளுக்காகச் செலவிடும் ஏழைகளுக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இந்த மாற்றம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

குறைந்த இறக்குமதி வரிகள் மூலம் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தமக்குத் தேவையான மூலப்பொருட்களை மலிவாகப் பெற முடியும். இம்முறையைப் பின்பற்றினால், வெளிநாட்டுப் போட்டிக்கு அஞ்சி ஒளிந்திருப்பதை விடுத்து, திறம்படப் போட்டியிடும் திறன் வளரும். காலப்போக்கில், ஒரு மூடிய உள்நாட்டுச் சந்தையிலிருந்து விடுபட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளில் போட்டியிடும் நிலைக்கு நமது வணிகங்கள் உயரும்.

அரசாங்கத்தின் வருமானத்திற்கு என்ன நடக்கும்? வர்த்தக வரிகள் (Trade taxes) தற்போது அரசாங்கத்தின் வருவாயில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தாலும், அவை மிகவும் பின்தங்கிய மற்றும் முற்போக்கான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒரு கருவியாகும்.

இலங்கையின் உள்நாட்டு வரிப்பகுப்பாய்வை முறையான வருமான வரி, நிறுவன வரி மற்றும் நுகர்வு வரி நிர்வாகத்தின் மூலம் படிப்படியாக விரிவுபடுத்தும் போது, உணவு மற்றும் இருப்பிடத்தின் மீது சுமையேற்றாமல் அரசாங்கத்தின் வருவாயைத் தக்கவைத்துக் கொள்ளவோ அல்லது அதிகரிக்கவோ முடியும்.

சர்வதேச அனுபவங்கள் காட்டுவது போல, திறமையான உள்நாட்டு வரிகளை நோக்கி படிப்படியாக மாறுவது, நிதி ஆரோக்கியத்திற்கும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் உந்துசக்தியாக அமையும். இங்கு முக்கியமானது எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்பதல்ல, வரி எங்கிருந்து, எவ்வாறு வசூலிக்கப்படுகிறது என்பதே ஆகும்.

முக்கியமானது விலைகளைப் பாதுகாப்பதல்ல, மக்களைப் பாதுகாப்பதே!

இலங்கையின் வறுமைப் பிரச்சினை பெரும்பாலும் வருமானமின்மையாகவே சித்தரிக்கப்படுகிறது. ஆனால், பொதுவான பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது கொள்கைகளால் உருவாக்கப்பட்ட ஒரு 'விலை பிரச்சினை' (Price problem) என்பது புலனாகும். இதன் விளைவாகவே அத்தியாவசியத் தேவைகள் எட்ட முடியாத உயரத்தில் உள்ளன.

தொடர்ந்து வரிகளை விதித்து, மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, உணவு மற்றும் வீட்டு விலைகளை உயர்த்தி, நகர்ப்புற வேலைவாய்ப்புகளை மட்டுப்படுத்தினால், அது உண்மையான உற்பத்தியை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக வறுமையையே நிரந்தரமாக்கும்.

மாறாக, சந்தையைத் திறந்து, கூடுதல் இறக்குமதி வரிகளைக் குறைத்து, வரி முறையை மேம்படுத்தி, வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்புகளில் முதலீடு செய்தால், செயற்கையாக விலைகளை உயர்த்துவதை விடுத்து மக்களுக்கு உண்மையான சேவையை வழங்க முடியும்.

இலங்கையினால் தாராளமயமாக்கல் (Liberalization) செய்ய முடியுமா இல்லையா என்பது கேள்வியல்ல. உண்மையான கேள்வி என்னவெனில், பாதுகாப்புவாதம் என்ற போலிப் பெயரில் ஏழைகளைப் பட்டினியிலும், கிராமப்புறத் தனிமைப்படுத்தலிலும் வைத்திருக்கும் இந்த வங்குரோத்து பொருளாதார மாதிரியை நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பொறுத்துக் கொள்ளப் போகிறோம் என்பதே ஆகும்.

"இக்கட்டுரையானது கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியரும், வறுமை பகுப்பாய்வு மையத்தின் (CEPA) நிறைவேற்று பணிப்பாளருமான பேராசிரியர் சிறிமல் அபேரத்ன அவர்களினால் எழுதப்பட்டதாகும். அவரை sirimal@econ.cmb.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது @SirimalAshoka என்ற எக்ஸ் (X/Twitter) கணக்கின் ஊடாகத் தொடர்புகொள்ளலாம்."

மொழிபெயர்ப்பு:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

America வின் அடுத்த target Malacca நீரிணையா?

ஹோர்முஸ் (Hormuz) நீரிணை மூடப்பட்டதன் காரணமாக, தற்காலத்தில் உலகெங்கிலும் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. சுருக்கமாகக் கூறினால், இலங்கையில் மீண்டும் ஒருமுறை ஒதுக்கீட்டு முறை (Quota System) மற்றும் QR குறியீடு (QR System) முறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது. இந்த நெருக்கடியின் காரணமாக, இந்த ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2% வரை குறையக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. 

பொதுவாக நீரிணை என்பது, இரண்டு பெரிய கடல் பகுதிகளை ஒன்றாக இணைக்கின்ற குறுகலான, இயற்கையான நீர்ப்பாதையைக் குறிக்கும். இத்தகைய நீரிணைகளுக்குப் புவிசார் அரசியல் ரீதியாகவும், உத்தி (Strategy) ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இதன் காரணமாகவே இவை முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. சர்வதேச வர்த்தகம் மூலமாக நாடுகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற இன்றைய உலகில், வெளியுறவுக் கொள்கையில் இதொரு முக்கியமான கருவியாகத் திகழ்கிறது. அத்தகைய மற்றுமொரு முக்கியமான நீரிணைதான் மலாக்கா (Malacca) நீரிணை ஆகும். 

ஹோர்முஸ் நீரிணையைப் போலவே மலாக்கா நீரிணை குறித்தும் தற்போது அமெரிக்கா மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றது. 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் மலாய் கடற்கரையில் அமைந்திருந்த மெலாக்கா/மலாக்கா வர்த்தகத் துறைமுகத்தின் மூலமாகவே இதற்கு இப்பெயர் கிடைத்தது. 900 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நீரிணை, இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கின்ற ஒரு கடல் பாதையாகும். இதற்கு மேற்குப் பகுதியில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவும், கிழக்கில் மலேசியாவும், தெற்கில் தாய்லாந்தும் அமைந்துள்ளன. எனவே, மலாக்கா நீரிணையின் முக்கியமான எல்லை நாடுகளாக மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை விளங்குகின்றன. 

இந்த நீரிணையின் வடக்கு நுழைவாயிலில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் இந்தியாவின் அந்தமான்-நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளதால், மலாக்கா நீரிணை இந்தியாவிற்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்தியாவின் வர்த்தகத்தில் ஒரு பெரும் பகுதி இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. 

2026 மார்ச் மாதம் அமெரிக்கா, இந்தோனேசியாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதன் மூலமாக அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு இந்தோனேசிய வான்வெளியில் முன்னரை விட அதிகமாக நடமாடுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதன் விளைவாக, மலாக்கா நீரிணை வழியாக அமெரிக்காவின் கண்காணிப்புப் பணிகளையும் கட்டுப்பாட்டையும் மேலும் அதிகப்படுத்த முடியும். அமெரிக்கா ஏன் இத்தகைய ஒப்பந்தத்தைப் போட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், மலாக்கா நீரிணையின் முக்கியத்துவத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 

உலகில் உள்ள இரண்டாவது பரபரப்பான எண்ணெய் போக்குவரத்துப் பாதையாக மலாக்கா நீரிணை கருதப்படுகிறது. முதலிடத்தில் ஹோர்முஸ் நீரிணை உள்ளது. மலாக்கா நீரிணையின் அகலம் மிகக் குறைவாக உள்ள இடமே 3 கிலோமீட்டர் மட்டும்தான். கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய்களில் 22% முதல் 29% வரை இந்த மலாக்கா நீரிணை வழியாகவே செல்கிறது. அதேபோல, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளைத் தாண்டிச் செல்லும் வர்த்தகக் கப்பல்களில் 25% முதல் 30% வரை இந்த நீரிணை வழியாகவே பயணிக்கின்றன. 

வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அமெரிக்கா தற்போது போரைக் கடந்து அதற்கு மேலான ஏதோ ஒன்றிற்குத் தயாராகி வருவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். லாபமில்லாமல் எவரும் எதையும் செய்யப் போவதில்லை. ஆயுதங்களால் போர் செய்வதைக் காட்டிலும், எண்ணெய் விநியோகப் பாதைகளைத் தடுத்து, எதிரியான சீனாவின் பலத்தை உடைத்து, அவர்களை விட ஒரு படி மேலே செல்வதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அனைத்து நாடுகளுக்கும் வரி விதித்திருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெனிசூலா மற்றும் ஈரானின் மீது ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றைக் கவனிக்கும்போது, மலாக்கா நீரிணையில் தலையிடுவது சீனாவிற்கும் ஒட்டுமொத்த ஆசியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

ஹோர்முஸ் நீரிணையைப் போலன்றி, மலாக்கா நீரிணை வழியாக எண்ணெய் மட்டுமின்றி வாகனங்கள், முடிவுற்ற பொருட்கள் (Finished goods) மற்றும் குறைக்கடத்திகள் (Semiconductors) போன்றவையும் கொண்டு செல்லப்படுகின்றன. சீனாவைத் தவிர்த்து தென்கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தித் தேவையில் 80% வரை இந்த மலாக்கா நீரிணை மூலமாகவே பூர்த்தியாகிறது. இந்த நீரிணையை அளவுக்கு அதிகமாக நம்பியிருப்பது சீனாவின் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகும். எனவே, என்றாவது ஒரு நாள் இந்த நீரிணை காரணமாகத் தங்களுக்குப் பெரிய அரசியல் ஆபத்து வரும் என்பதைச் சீனா முன்னரே உணர்ந்திருந்தது. இதனைத்தான் 'மலாக்கா தர்மசங்கடம்' (Malacca Dilemma) என்று அழைக்கிறார்கள். 

ஹோர்முஸ் மற்றும் மலாக்கா ஆகிய இரண்டு நீரிணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவற்றிற்கு இடையிலான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை வைத்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். ஹோர்முஸ் நீரிணை ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையில் அமைந்துள்ளது. ஆனால் மலாக்கா நீரிணை மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் உள்ளது. முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நுழைவாயிலாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது. மலாக்கா நீரிணை ஆசியாவின் வர்த்தகத்திற்கும் எரிசக்திக்கும் ஒரு முக்கியப் பாதையாக (Energy Corridor) உள்ளது. 

எண்ணெய் போக்குவரத்தைப் பொறுத்தவரை, உலகின் மொத்த திரவ பெட்ரோலியப் பயன்பாட்டில் 20% முதல் 25% வரை ஹோர்முஸ் வழியாக நடைபெறுகிறது. அதேபோல உலகக் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் 29% மலாக்கா நீரிணை வழியாக நடைபெறுகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட அடுத்த கணமே அதன் பாதிப்பு காட்டுத்தீயைப் போல உலகம் முழுவதும் பரவியது. அதற்கு முக்கியக் காரணம், ஹோர்முஸ் நீரிணைக்குப் பதிலாகப் பயன்படுத்த வேறு மாற்று வழிகள் (Alternative routes) இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி, சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஈராக் மற்றும் கத்தார் போன்ற முக்கியமான எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல இருக்கும் ஒரே வழி இந்த ஹோர்முஸ் நீரிணை மட்டும்தான். 

மலாக்கா நீரிணை சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவின் பொருளாதாரங்களுக்கு மிக முக்கியமானது. ஒருவேளை இந்த நீரிணை மூடப்பட்டாலும் கூட, இந்தோனேசியாவின் சுண்டா (Sunda) மற்றும் லொம்போக் (Lombok) போன்ற மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த முடியும். ஆனால் அவற்றில் உள்ள சிக்கல் என்னவென்றால், அந்தப் பாதைகளில் பயணிப்பதற்கு அதிக தூரமும் நேரமும் செலவாகும். இதனால் கொண்டு செல்லப்படும் பொருட்களின் விலையும் உயரும். 

இந்த இரண்டு நீரிணைகளையும் சுற்றியுள்ள ஆபத்துகளைப் பார்க்கும்போது, ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி எப்போதும் புவிசார் அரசியல் மோதல்கள் (Geopolitical conflicts) நிலவுகின்றன. ஆனால் மலாக்கா நீரிணையில் கடல் கொள்ளையர்கள் (Piracy) மற்றும் கப்பல் போக்குவரத்து நெரிசல் (Congestion) ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த இரண்டில், ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமானது பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்பாகும். ஏனெனில் போர் அல்லது கொள்கை மாற்றங்கள் என உலகில் எங்கு என்ன நடந்தாலும், அதன் பாதிப்பு முதலில் நமது பொருளாதாரத்தையே (Pocket) பாதிக்கும். அதனால்தான் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டவுடன் உலக அளவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அதேபோல மலாக்கா நீரிணைக்கு ஏதேனும் தடை ஏற்பட்டால், அது எண்ணெய்க்கு மட்டுமின்றி ஆசியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்திற்கே ஒரு பெரிய முட்டுக்கட்டையாக அமையும். 

ஆக்கம்:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

மத்திய கிழக்கால் இலங்கைக்கு ஆகப்போவது என்ன?

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடிகள் குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை ஊடகங்களில் முக்கியச் செய்தியாக (Breaking News) ஏதேனும் ஒரு புதிய தகவல் வந்தவண்ணமே உள்ளது. ஆனால் நாம்? போரின் ஆழமான பின்னணிகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே, அச்சப்படத் தேவையில்லை என்றும் அடுத்த மாதம் வரை போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும் அரசாங்கம் உறுதியளித்த பின்னரும், எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று பதற்றத்துடன் எரிபொருளைக் கொள்வனவு (Panic Buying) செய்யத் தொடங்கிவிட்டோம்.

இந்த நெருக்கடிக்கெல்லாம் அடிப்படைப் பின்னணி என்னவென வினவினால், அணு ஆயுத உற்பத்தியும் அதனால் எழும் அச்சுறுத்தலுமே காரணங்கள் எனக் கூறப்படுகிறது. எனினும், இதற்கான உண்மையான காரணத்தை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்கக்கூடும். இதன் பின்னணியில் நுணுக்கமான அரசியலும் அதிகாரப் போட்டிகளும் அடங்கியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்த போரினால் ஏற்படக்கூடிய பாரிய மாற்றங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதைச் சுருக்கமாக ஆராயவுள்ளோம்.

இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் உருவாகும்போது, உடனடியாக எரிபொருள் விலை உயரும் அல்லது தட்டுப்பாடு ஏற்படும் என்பதுதான் நம் அனைவரது முதல் எண்ணமாக இருக்கிறது. இதனால்தான் மக்கள் அச்சமடைந்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கத் தொடங்குகிறார்கள். இது கண்களுக்குத் புலப்படும் ஒரு நேரடிப் பாதிப்பாக இருந்தாலும், இதற்கு அப்பால் நாம் கவனிக்கத் தவறும் அல்லது மறந்துவிடும் சில முக்கியப் பொருளாதாரக் காரணிகளும் உள்ளன.

முதலாவதாக, அந்த நாடுகளில் பணிபுரியும் மக்களும், அதன் விளைவாகப் பாதிக்கப்படவுள்ள நமது வேலைவாய்ப்புச் சந்தையும் (Job Market). கிட்டத்தட்ட, 1 மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கை மக்கள் Gulf Cooperation Council (GCC) countriesகளில், அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் வெளியான புள்ளிவிவரங்களின்படி, பல்வேறு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் விபரங்கள் பின்வருமாறு:

நாடு பணியாளர்களின் எண்ணிக்கை
ஐக்கிய அரபு அமீரகம்(UAE)  350,000
சவூதி அரேபியா  246,139
குவைத்  175,000
கத்தார்  140,000
ஓமான்  32,000
ஜோர்டான்  14,500
பஹ்ரைன்  13,130

இத்தனை பேரின் வாழ்வாதாரமும் உயிரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, அவர்களால் இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் (Remittance) பெருமளவில் பாதிக்கப்படும். இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பில் முக்கியமான எலும்பு தான் இந்த remittance பணம். 2025 ஆம் ஆண்டில் மட்டும் 8 பில்லியன் டாலர் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டிற்குள் வரும் பணம் வங்கிகளில் வெறும் இருப்பாக மட்டும் தங்கிவிடுவதில்லை; மாறாக, கிராமப்புறங்களில் வீடுகள் கட்டுவதற்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும் அது பெரும் உதவியாக இருக்கின்றது. இந்தப் போர்ச் சூழல் நீடிக்குமாயின், இலங்கைக்குப் பணம் அனுப்புவதை விடத் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அங்குள்ளவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள். இதன் விளைவாக, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை நம்பியிருக்கும் இலங்கைக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். அதேவேளை, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில், இலங்கையின் வேலையின்மை விகிதம் 3.8 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தப் போர் காரணமாக, இனிவரும் காலங்களில் வளைகுடா நாடுகளுக்குப் பணி நிமித்தமாகச் செல்லவிருப்போரின் பயணங்களும் தடைப்படக்கூடும். இவ்வாறு வேலைவாய்ப்புகள் சுருங்குவதால், இலங்கையில் வேலையின்மைப் பிரச்சினையின் தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மற்றொருபுறம், அங்கு பணிபுரியும் மக்கள் பாதுகாப்பு நிமித்தமாக மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அதனால் ஏற்படும் வருமான இழப்பையும், வேலையற்ற நிலையில் உள்வாங்கப்படும் அதிகப்படியான மக்களையும் நாம் கையாள வேண்டியிருக்கும்.

அடுத்ததாக, சுற்றுலாத்துறையில் (Tourism Industry) ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துப் பார்ப்போம். சுற்றுலாத்துறையைத் தனது பிரதான வருமான ஆதாரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ள இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு, இந்தப் போர்ச் சூழல் மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் மேலைத்தேயநாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு துபாய் (Dubai), தோஹா (Doha) மற்றும் அபுதாபி (Abu Dhabi) போன்ற வளைகுடாப் பிராந்தியங்களே Transit points ஆக விளங்குகின்றன. அதேபோல், நாம் இலங்கையிலிருந்து மேலைத்தேயநாடுகளுக்குப் பயணிப்பதற்கும் மத்திய கிழக்குப் பகுதிகளையே Transit points ஆகப் பயன்படுத்துகின்றோம். எனவே, இந்தப் போர்க்கால நிலைமையால் கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways), எமிரேட்ஸ் (Emirates) மற்றும் எட்டிஹாட் (Etihad) போன்ற முன்னணி விமானச் சேவை நிறுவனங்கள் தமது பல விமானப் பயணங்களை ரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ கூடும். ஏற்கனவே சில விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சுற்றுலாத்துறை மட்டுமன்றி, தளவாடங்கள் மற்றும் சரக்குக் போக்குவரத்து (Logistics and Cargo transport) உள்ளிட்ட வான்வழிப் போக்குவரத்து மூலம் கிடைக்கக்கூடிய வருமானங்களையும் நாம் இழக்க நேரிடும். இது இறுதியில் இலங்கை ரூபாயின் ஸ்திரத்தன்மையிலும் (Stability) நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அடுத்ததாக, எமது வர்த்தக வருமானம் (Trade Income) பற்றிப் பார்ப்போம். ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற நாடுகள் இலங்கையின் தேயிலையை கொள்வனவு செய்யும் மிக முக்கியமான நாடுகளாகத் திகழ்கின்றன. எனவே, இந்த யுத்தச் சூழலால் அந்த நாடுகளின் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது (Market Collapse), அது எமது நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை நேரடியாகப் பாதிக்கும். அத்துடன், இந்தப் பாதிப்பை ஈடுகட்ட நாம் புதிய சந்தைகளைத் தேட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாவோம். இன்றைய நிலையில் அதுவும் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.

தற்போதைய சூழலில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடிவிட்டது; இதன் காரணமாக இலங்கைக்கு எரிபொருள் தாங்கிய கப்பல்கள் வந்து சேராது, நாட்டில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகும் (வரிசை யுகம்), மின்சாரத் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டு நாடு இருளில் மூழ்கும் மற்றும் பொருளாதாரம் சரிவடையும் என்றெல்லாம் செய்திகள் பரவுகின்றன.

மக்கள் மீண்டும் சொல்லொணாத் துயரங்களை விரும்பியோ விரும்பாமலோ அனுபவிக்கப் போகிறார்கள் எனும் செய்தியை ஒரு தரப்பினர் பரப்ப விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ, இவ்வாறான விபரீதங்கள் உண்மையாகவே நடந்துவிடுமோ என்று மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்தால் எண்ணெய் விநியோகம் முழுமையாக ஸ்தம்பிதமடையும் என்றும், நாட்டில் பயன்பாட்டிற்கு ஒரு சொட்டு எரிபொருள் கூட எஞ்சியிருக்காது என்றும் பலரும் கருதுகின்றனர்.

இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெயின் பெரும்பகுதி ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளிலிருந்தே பெறப்படுகின்றது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் சிங்கப்பூர் அல்லது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

எனவே, தற்போது பெரும் விவாதத்திற்குள்ளாகியிருக்கும் ஈரானுக்கு அருகிலுள்ள 'ஹோர்முஸ் நீரிணை' (Strait of Hormuz) வழியாகவே எமது எரிபொருள் தாங்கிய கப்பல்கள் கட்டாயம் வர வேண்டும் என்பதில்லை. அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளும் தற்போது போர்ச் சூழலுக்கு அப்பாற்பட்ட மாற்றுப் பயணப் பாதைகளையே பயன்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, ஒருவேளை போர் மூண்டாலும் எரிபொருள் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% முதல் 30% வரையான அளவு ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகவே நடைபெறுகின்றது; குறிப்பாக சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விநியோகம் இந்தப் பாதையையே நம்பியுள்ளது. ஈரானிய நெருக்கடி காரணமாக இந்த நீரிணை வழியிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டால், உலகளாவிய ரீதியில் எண்ணெய் விநியோகம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தச் சந்தர்ப்பத்தில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிகக் கடுமையாக உயரும். இலங்கை தனது இறக்குமதிக்கு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தினாலும், சர்வதேச சந்தையில் நிலவும் அந்தப் பாரிய விலை அதிகரிப்பிற்கு ஏற்பவே எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். விநியோகப் பாதை வேறாக இருந்தாலும், சர்வதேச சந்தை விலையின் தாக்கத்திலிருந்து நாம் தப்ப முடியாது.

இலங்கையைப் பொறுத்தவரை மிகப்பாரிய சிக்கல் என்னவெனில், உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயரும்போது, மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்காக நாம் பெருமளவிலான டொலர்களைச் செலவிட வேண்டியிருக்கும். இது எமது வெளிநாட்டுச் செலாவணி கையிருப்புக்கு (Foreign Exchange Reserves) கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையைக் கட்டுப்படுத்தத் தவறினால், நாட்டில் மீண்டும் டொலர் பற்றாக்குறை உருவாகக்கூடிய அபாயம் உள்ளது. தற்போதைய சூழலில் நேரடிப் பாதிப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும், இலங்கை இப்போதுதான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது. இத்தருணத்தில் ஏற்படும் இவ்வாறான உலகளாவிய நெருக்கடிகள், 'மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய' கதையாக மாறி, எமது பொருளாதார மீட்சியை மீண்டும் சீர்குலைத்துவிடக் கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உருவானால், அந்தப் பிராந்தியத்தின் ஊடாகச் செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணங்கள் (Insurance Premium) மற்றும் இதர கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இந்தக் காப்பீட்டுத் தொகையானது மிகச் சிறியது அல்ல; மாறாக அது ஒட்டுமொத்தப் போக்குவரத்துச் செலவில் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கக்கூடியது. இவ்வாறு அதிகரிக்கப்படும் கூடுதல் செலவுகள் அனைத்தும், இறுதியாக இலங்கையில் நுகர்வோர் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளின் விலையுடனேயே சேர்க்கப்படும்.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையமானது ஆரம்பத்தில் Iranian Light வகை மூல எண்ணெயைச் சுத்திகரிப்பதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டது. சர்வதேசத் தடைகள் காரணமாக நாம் தற்போது ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை என்றாலும், ஒரு நெருக்கடி காலத்தில் சபுகஸ்கந்தவின் தொழில்நுட்பக் கட்டமைப்பிற்குப் பொருந்தக்கூடிய மாற்று மூல எண்ணெயை (Alternative Crude Oil) விரைவாகக் கண்டறிவது என்பது எளிதான காரியம் அல்ல.

ஆக மொத்தத்தில், இலங்கைக்குப் பாரிய ஆபத்து என்பது கப்பல்கள் தடைப்பட்டு எரிபொருள் இல்லாமல் போவது அல்ல; மாறாக, உலகச் சந்தையில் எண்ணெயின் விலை உயர்ந்து எமது பொருளாதாரச் சுமை அதிகரிப்பதே ஆகும். 

எது எப்படியோ, அடுத்த ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எனவே, எவரும் உச்சந்தலையைப் பிளக்கும் இந்தப் பங்குனி வெயிலில் தேவையற்ற முறையில் வரிசைகளில் நின்று காலத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. 

இருப்பினும், தனது வாகனத்தின் எரிபொருள் கலனை (Tank) நிரப்பிக் கொண்டால் மட்டும் போதும், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நெருக்கடியும் தீர்ந்துவிடும் என்று நினைக்கும் விசித்திரமான மனிதர்கள் வாழும் நாடு இது. இத்தகைய மனப்பாங்கு கொண்டவர்களைத் திருத்துவது என்பது எப்போதும் ஒரு சவாலான காரியமே.

ஆக்கம்:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

கொவிட் -19 இன் பொருளாதாரத் தாக்கங்கள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ”Economic implications of COVID-19

கொவிட்-19 இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தாக்கங்களில் வேலை நாட்களின் எண்ணிக்கையை நேரடியாகக் குறைத்தல் மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான சமூக இடைவெளி, நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கையாளுவற்கான மருத்துவ செலவுகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்கள் மற்றும் தேவையான சமூக இடைவெளி  தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தயாராக இல்லாதவர்களுக்கு ஏற்படக் கூடிய பாரிய தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான செலவுகள் ஆகியன உள்ளடங்கும். 

வருமானத்தில் உடனடி விளைவு இருக்கும் என்றாலும், வைரஸ் பரவுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் கொள்கைகளிலிருந்து நடுத்தர மற்றும் நீண்ட கால விளைவுகள் ஏற்படும். நோய்த்தொற்றுகளின் வீதத்தைப் பொருத்தவரை, இதுவரை நாங்கள் சிறப்பாகச் செய்துள்ளோம். பிரச்சினை என்னவென்றால், அதிக எண்ணிக்கையிலான பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களை ஈடுபடுத்தி நோய்தடுப்புப் பொறிமுறையை நம்மால் பராமரிக்க முடியுமா  என்பதாகும். 

பொருளாதாரத்திற்கான இந்த அதிர்ச்சியானது நாம் சந்தித்த (2008-2012) உலகளாவிய நிதி நெருக்கடியைவிட பெரியதும் மற்றும் ஆழமானதுமாகும். எமது முக்கிய ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களில் குறைவுகளை சந்தித்தமை காரணமாக அந்த நெருக்கடியின் வரையறுக்கப்பட்ட விளைவு காணப்பட்டது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு எமது சுற்றுலாத் துறையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் கொவிட்-19 தாக்கியபோது அதிலிருந்து நாங்கள் முழுமையாக மீளவில்லை. ஆனால் விளைவானது  ஒப்பீட்டளவில் சிறியதாகும் ஒரு துறைக்கு வரையறுக்கப்பட்டதாகவும் இருந்தது.

ஆரம்ப நிலைமைகள்

கொவிட்-19 தாக்கியபோது நாங்கள் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் இருந்தோம். 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2.6% ஆக இருந்தது, கொவிட் -19 இன் தாக்கத்துடன் கணிசமான சீர்திருத்தங்கள் மற்றும் பெரிய உட்பாய்ச்சல்கள் இல்லாமல், குறிப்பாக நேரடி வெளிநாட்டு முதலீடு இன்றி, எமது சராசரி வளர்ச்சி விகிதத்தை மீட்டெடுப்பதனை (மூன்று தசாப்தங்களுக்கு 4% சராசரி) எதிர்வரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அடைவதற்குக் கடினமாக இருக்கும்.

2018 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பிறகு சுற்றுலாத்துறையின் வருமானம் கணிசமாகக் குறைவடைந்தது. சுற்றுலாத்துறையின் உடனடி எதிர்காலம் நன்றாகத் தெரியவில்லை. எங்கள் ஏற்றுமதிகள் நடப்புக் கணக்கில் பணம் செலுத்தும் அளவுக்கு உதவுவதற்குப் போதுமான அளவில் அதிகரிக்கவில்லை. இதற்கிடையில், கடன் வாங்கிய நிதியின் ஒரு பகுதி உட்பட நமது அந்நிய செலாவணி ஒதுக்கமானது சுமார் 7.0 பில்லியன் டொலராக குறைவானதாகவே உள்ளது. இறுதியாக, எதிர்வரும் 2020-2023 ஆகிய நான்கு ஆண்டுகளில் 16 .0 பில்லியன் டொலர் பெறுமதியுயான பாரிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

கொவிட் -19 இன் பொருளாதாரத் தாக்கம்

வைரஸ் பரவலின் கணிசமான பொருளாதார தாக்கத்தை நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்பார்க்கலாம், பிந்தையது முந்தையதை விட முக்கியமானது. வழங்கப்பட்ட நேரடி தாக்கம் என்னவென்றால், இன்றுவரை ஊழியப்படையானது மெய்நிகர் தனிமைப்படுத்தலில் உள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இதற்கு முன்னர் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத நிதிகள் செலவு செய்யப்படும். மேலும், நிவாரண நடவடிக்கைகளுக்கு அதிக செலவு ஏற்படும்.

சிறப்பு நிதி ஒதுக்கீடு காணப்பட வேண்டும். மற்ற நாடுகளின் அனுபவத்தைப் பார்த்தால் இந்த நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும், ஆனால் சரியான நெறிமுறைகளைப் பின்பற்றினால் குறிப்பாக சமூக இடைவெளி மூலம் நமது நோய்த்தொற்றுகள் குறைவாகவே இருக்கும். நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ சேவைகளுக்கான அணுகலை வழங்க சரியான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவற்றின் தாக்கத்தை நாம் குறைக்க முடியும். அதிக பரிசோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் பயிற்சி பெற்ற தொற்றுநோயியல் நிபுணர்களை நம்புவது உதவும்.

பொருளாதாரத்தில் வைரஸின் நேரடித் தாக்கமானது, அனைத்து துறைகளிலும் உற்பத்தி கிட்டத்தட்ட ஒரு முழு நிறுத்தத்திற்கு வந்துள்ளமையால்  வெளியீடு குறைந்துள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்ட பகுதிகளில் மட்டுமே அதிகரிக்கப்படுகின்றது. ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் அதிக சனத்தொகை கொண்ட கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவிருப்பதுடன்  அவர்கள் இன்னும் தங்கள் வீடுகளிலே உள்ளனர்.

தேசிய வருமானத்தைப் பொறுத்தவரை - ஊதியங்கள், இலாபங்கள் மற்றும் வட்டி வருமானங்கள் அண்மைக் காலத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். இது மீட்டெடுப்பதற்கு மிகவும் தேவையான கொள்கைகளை உருவாக்குகிறது. அவசரகாலத்தை நாங்கள் சமாளிக்கும் அதே வேளை, முறையான கொள்கைகளுக்கு நாம் அண்மைய எதிர்காலத்திற்கு அப்பால் சிந்திக்க வேண்டும். இந்த அவசர நிலைமைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கொவிட் -19 தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நிகழ்ச்சிகள்

நிவாரண நடவடிக்கைகளின் முழு பட்டியலையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில் பின்வருவன உள்ளடங்கும்:

  • வருமான வரி செலுத்துவதற்கான தயவுக்காலங்கள். மற்றும் சேர்பெறுமதி வரி, வாகன அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல், தண்ணீர்க் கட்டணங்களை செலுத்துதல் மற்றும் ரூ. 15,000 இற்குக் குறைந்த  ஆதன வரிகளைச் செலுத்துதல், 50,000 க்கும் குறைவான மாதாந்த  கனட்டைப் பட்டியல்களைச் செலுத்துவதற்கு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிப்பு வழங்குதல்.

  • முச்சக்கர வண்டிகளின் குத்தகை கடன் கொடுப்பனவுகளை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்துதல்.

  • மே 30 வரை அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களிடமிருந்து கடன் தொகையை மீளஅறவிடாமை.

  • ரூபா. 1 மில்லியனுக்கும் குறைவான தனிநபர் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துதல்.

  • பயிற்சியைப் பின்பற்றுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ரூபா. 20,000 கொடுப்பனவு வழங்கப்படுதல்.

  • நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான அக்ரஹாரா காப்புறுதிச் சலுகைகளை இரட்டிப்பாக்குதல்.

  • சுற்றுலா மற்றும் தைத்த ஆடைத் துறைகளைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கு (SME) ஆறு மாத கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு காலம் தாழ்த்துதலை வழங்குதல்.

  • பணச் சந்தையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் சேலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன கூட்டாக திறைசேரிப் பிணையங்கள் மற்றும் பத்திரங்களில் 7% வட்டி வீதத்தில் முதலீடு செய்தல்

இந்த நடவடிக்கைகள் எதுவும் விலை முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானவை வழிகாட்டல்கள், கட்டளைகள் மற்றும் தொகைரீதியான நடவடிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவையாகும்.

நிவாரணம் வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகளில் பின்வருன  அடங்குகின்றன

  • கடனட்டைகளில் உள்நாட்டு கொடுக்கல்வாங்கல்களில் அதிகபட்சம் 15% வட்டி விகிதம் ரூ. 50,000 வரை மற்றும் குறைந்தபட்ச மாதாந்த கட்டணங்களில் 50% குறைப்பு.

  • அனைத்து வங்கி கிளைகளும் ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரங்களில் திறந்திருத்தல்.

  • துறைமுகங்கள், சுங்கம் மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகள் அத்தியாவசிய உணவு, உரம், மருந்துகள் மற்றும் எரிபொருளை தொடர்ந்து தொடர்புடைய நபர்களுக்கு வழங்குதல்.

  • சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் சமுர்த்தி அட்டை வைத்திருபவர்களுக்கு வட்டி இல்லாத முற்பணம்  அல்லது 10,000 ரூபாவை  சமுர்த்தி வங்கிகள் மூலம் வழங்குதல்.

  • சமுர்த்தி அதிகாரசபையானது உடனடியாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சத்துணவுப் பொருட்களுக்கான உரித்துச் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

  • சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு சேர்பெறுமதி வரி மற்றும் பிற வரிகளிலிருந்து விலக்களித்தல்.

  • உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்புக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் இலங்கை வங்கியில் இல் ஒரு சிறப்பு கணக்கு திறக்கப்பட்டது. ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் அரிசி, பருப்பு மற்றும் உப்பு வழங்கப்படுதல். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இந்த நிதியில் பங்களிப்பதற்காக வரி மற்றும் அந்நிய செலாவணிக் கட்டுப்பாடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இருந்தபோதிலும், ஏழைகளுக்கும் குறிப்பாக வேலையற்றோர் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கும் பொருளாதார நிவாரணம் வழங்குவது கடினம். சமுர்த்தி சரியாக இலக்கு வைக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணமாகும். உதவி பெறத் தகுதியான சிலருக்கு இந்த வருமான இடமாற்றங்களுக்கு அணுகல் இல்லை, அதிக வருமானம் உள்ள ஏனையோர் சமுர்த்தி நிதியைப் பெறுகிறார்கள். தகுதியான ஏழைகளுக்கு உதவ எமது எதிர்கால திட்டங்களில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

சிலி போன்ற பிற நாடுகளில் விரிவான குடும்ப மற்றும் வருமான தரவுகளின் அடிப்படையில் வருமான பரிமாற்ற முறை உள்ளது. சமுர்த்தி பெறாதவர்கள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்களுக்கு பங்கீட்டு அட்டைகளை வழங்குவதற்கு எமது அரசாங்கம் எடுத்திய சமீபத்திய முயற்சி உதவியாக இருக்கும். ஆனால் நடுத்தர முதல் நீண்ட காலத்திற்கு, நாம் சமுர்த்தி திட்டத்தை சீர்திருத்தி தகுதியானவர்களுக்கு நன்மைகளை வழங்குவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியானது கடன் கட்டுப்பாடுகள் மூலம் இறக்குமதி கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது, இது பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் நீண்ட கால சிதைவுகளை உருவாக்கி அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். இந்தக் கொள்கைகள் மூலம், போட்டி பரிமாற்ற வீதம் உட்பட பொருளாதாரத்தை நிர்வகிக்க விலைகளைப் பயன்படுத்துவதை விட தொகைரீதியான நடவடிக்கைகளில் அதிக நம்பகத்தன்மையை இது குறிக்கிறது. விலை முறை பயன்படுத்தப்படாதபோது, ​​பகுத்தறிவற்ற ஒதுக்கீடு மற்றும் ஊழலை வளர்க்கும் ஒரு அதிகாரம் அல்லது “ஸார்” மூலமாக அளவுகளை ஒதுக்க வேண்டி ஏற்படும்.

முடிவுகள்

கொவிட்-19 ஆல் உருவாக்கப்பட்ட குறுகிய கால சூழ்நிலையை, குறிப்பாக நுகர்வு தரப்பில் தீர்வு காண ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் பொருத்தமானவையாகும். ஆனால் தனியார் மருந்தகங்களை மூடுவது போன்ற முழுமையான பணிநிறுத்தங்கள் நீரிழிவு, நாள்பட்ட இதய நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற தினசரி மருந்துகள் தேவைப்படுபவர்களின் சுகாதாரத் தரங்களைப் பராமரிப்பதற்கு எதிர்மறையானவை. தனியார் மருந்தகங்களை திறக்க அனுமதிப்பது போன்று கட்டுப்பாட்டை தளர்த்துவது சாத்தியமானது என்று கண்டறியப்பட்டது.

இருப்பினும், நாங்கள் ஏற்கனவே பலவீனமான ஆரம்ப நிலைமைகளிலிருந்து தொடங்குவதால், இந்தப் பணி எளிதானதல்ல. மேலும், இது பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கை விரிவாக்குவதற்கும் அதிகாரத்தை அதிகம் பயன்படுத்துவதற்கான ஆபத்தைக் கொண்டுள்ளது. சில நேரங்களில், அதை குறைத்துப் பயன்படுத்துவது, வருமான இடமாற்றங்கள் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை செயல்படுத்துவது பொது சேவையை பெரிதும் சார்ந்துள்ளது. இது திறமையாகவும் விரைவாகவும் செயல்படுவதாகத் தெரியவில்லை.

அரசாங்கத்தின் கையை மிகைப்படுத்தி அரசாங்கத்திற்கு கூடுதல் மற்றும் நிரந்தர அதிகாரத்தை வழங்குவதற்கான ஆபத்தை கொண்டுள்ளது. அந்த சோதனையின் முடிவுகளை 1970-1977 காலகட்டத்தில், வருமான உச்சவரம்புகளுடன், நெல் போக்குவரத்து மீது 100% இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் நாம் கண்ணுற்றோம். அரசாங்கத்தின் அதிகமாகத் தலையீடு செய்தமை அந்த காலகட்டத்தில் பேரழிவு தரும் முடிவுகளுக்கு வழிவகுத்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்தது, வேலைவாய்ப்பைப் போலவே வாழ்க்கைத் தரத்திலும் அபரிதமான வீழ்ச்சி ஏற்பட்டது.

இலங்கை மத்திய வங்கியானது கடன் அளவில் செல்வாக்குச் செலுத்துவதற்கு நேரடி தொகையியல் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது நல்லது. இது கொவிட்-19 அதிர்ச்சியைக் கையாள்வதற்கான பொருளாதாரத்தின் நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கும் மற்றும் ஒதுக்கங்களை  முகாமை செய்வது  உள்ளிட்ட தொகைரீதியான நடவடிக்கைகளுக்கான அதன் விருப்பத்தை குறிப்பாக நெகிழ்வான மற்றும் போட்டி பரிமாற்ற வீதங்களைத் தவிர்த்தல்.

நேரடி நடவடிக்கைகள் போட்டி இல்லாத பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும், குறிப்பாக நமது ஏற்றுமதி வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். இறக்குமதியை நேரடியாக தடை செய்வது ஏற்றுமதிக்கு எதிரான ஒரு சார்பை உருவாக்கும். பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கு ஊக்குவிக்கும் சீர்திருத்தங்களில் நாம் தங்கியிருக்க வேண்டும். குறுகிய காலத்தில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பது அவசியமாக இருக்கலாம். ஆனால் நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சியை உறுதிப்படுத்த இது போதாது.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை எட்வகாடோ நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.


இலங்கையின் பலவீனமான பொது நிதிகள் கொவிட்-19 இலிருந்தான பொருளாதார அதிர்ச்சிகளை மேலும் அதிகப்படுத்தும்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ”Sri Lanka’s weak public finances will exacerbate economic shocks from COVID-19

இலங்கையின் தளம்பும் பொது நிதியானது கொவிட்-19 இன் வீழ்ச்சி மூலம் மற்றொரு அடியைப் பெற உள்ளது. ஒரு தொற்றுநோயின் மிக முக்கியமான அம்சம் எப்போதும் மனித செலவாகவிருந்தபோதிலும் வைரஸின் பரவல் பொருளாதாரத்திற்கு முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுகாதாரம், போக்குவரத்து, விவசாய மற்றும் சுற்றுலாத் துறைகள் உட்பட பல வழிகள் மூலம் தொற்றுநோய் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எல்லைகள் மூடப்பட்டு உலக சந்தைகள் மெதுவாக இருப்பதால்; வர்த்தகம் பாதிக்கப்படுகிறது, எனவே ஏற்றுமதிகள் பாதிக்கப்படுகின்றன.

இலங்கையின் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறை மேலும் பாதிக்கப்படும், மேலும் சில முக்கிய ஏற்றுமதியாளர்களின் கட்டளைப் புத்தகங்கள் அடுத்த காலாண்டில் பாதிக்கப்படும். சர்வதேச விநியோகச் சங்கிலிகள் ஒப்பந்த ஏற்றுமதிகள் தடைப்பட்டிருப்பதால், சந்தைகள் கூறுகளாக மீண்டும் திறக்கப்படும் போதும், மூலப்பொருட்கள் குறுகிய விநியோகத்தில் இருக்கக்கூடும். இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவதால் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தாக்கமானது உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் கூட பாதிக்கும். விவசாயமானது இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நடுகைப் பொருட்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள்  ஆகியவற்றில் தங்கியுள்ளது. உள்ளூர் தொழிற்சாலைகள் மூலப்பொருட்கள், கூறுகள் மற்றும் உதிரிப்பாகங்களை வெளிநாடுகளிலிருந்து பெறுவதனால் மேலும் அவை முழு இயல்திறனில் வேலை செய்ய முடியாமல் போகலாம்.

காசுப் பாய்ச்சலானது நின்று போய், கடன்கள் அதிகரிக்கும் போது, ​​பல வணிகங்களால் அதனைச் சமாளிப்பது கடினம். 2008/10 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடியின் போது, ​​உற்பத்தி நிறுவனங்களிடையே, குறிப்பாக ஆடைத் துறையில் ஆட்குறைப்பு காரணமாக 90,000 இலங்கையர்கள் வேலை இழந்தனர். தற்போதைய நெருக்கடியின் தாக்கம் அதைவிட மோசமாக இருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் நிதி நெருக்கடியைப் போலன்றி, இந்த தொற்றுநோய் தாக்கம் முன்னேறிய நாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. ஏற்றுமதி சந்தைகளின் இழப்பு காரணமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பாதிக்கப்பட்டன, ஆனால் அவற்றின் உள்நாட்டு சந்தைகள் பாதிக்கப்படவில்லை. இந்த தொற்று அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளை பாதிக்கிறது. அன்றாட ஊதியம் பெறுபவர்கள் தங்களது ஏற்கனவே நிச்சயமற்ற வருமானங்கள் மேலும் குறைந்து போவதைக் காண்பார்கள். சிறு வியாபாராங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

இதன் பொருள் வளர்ச்சி மேலும் குறையும் என்பதாகும். வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையானது வருமான வீழ்ச்சி மற்றும் அதிகரித்த செலவினங்கள் காரணமாக இரட்டிப்பாகும். குறைந்த அளவிலான செயல்பாடு என்பது வரிச் சேகரிப்பின் குறைந்த அளவைக் குறிக்கிறது. விற்பனை மற்றும் இறக்குமதி குறைந்து வருவதால், சேர்பெறுமதி வரி மற்றும் இறக்குமதி வரிச் சேகரிப்புக்கள் குறையும். வணிக இலாபங்கள் குறையும்போது, ​​வருமான வச் சேகரிப்பு குறையும். இதற்கிடையில், தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்திற்கான சுகாதார செலவுகள் (சோதனை கருவிகள் முதல் மருத்துவமனை செலவுகள் வரை) மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான செலவுகள் உயரும். இதனால் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை விரிவடையும் மற்றும் அரசாங்கம் மேலும் கடன் வாங்க வேண்டியிருக்கும். இலங்கையின் வட்டிப் பற்றுச்சீட்டு இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ .1 டிரில்லியன் ஆகும்.

பொது நிதி வலுவானதாக இருந்தாலும், இது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும், ஆனால் தொடங்குவதற்கு ஆரோக்கியமற்ற இலங்கையின் நிதி - சமீபத்திய வரி வெட்டுக்களால் பலவீனமடைந்தது. வீழ்ச்சியை மதிப்பிடுவது கடினம், ஆனால் கிடைக்கக்கூடிய கொள்கை விருப்பங்களை மதிப்பிடுவதற்கு முதன்மை சிக்கல்களை மறுபரிசீலனை செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

இலங்கை 2016 ஜூன் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான வசதியைப் பெற்றது. இது 1950 ஆம் ஆண்டில் இந்த நிதியத்தில் இணைந்ததிலிருந்து இவ்வாறு பெற்ற 16 வது நிகழ்வாகும்- இது அடிப்படை சிக்கல்களின் முறையான மற்றும் நீண்டகால தன்மையைக் குறிக்கிறது. சமீபத்திய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் "வரி வருவாயில் இரண்டு தசாப்த கால சரிவை மாற்றியமைத்தல் மற்றும் பொது நிதிகளை ஒரு நிலையான நடுத்தர கால கட்டத்தில் வைத்தல்" ஆகும். வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைக்க அரசாங்க வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், எனவே அரசாங்கத்தின் கடன் (பற்றாக்குறைகள் குறையும்போது, ​​கடன் வாங்க வேண்டிய அவசியம் குறைகிறது) குறைகின்றது.

பிரபலமான கற்பனையில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் சிக்கன நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை: அரசாங்க செலவினங்களைக் குறைத்தல், இது சமூக மற்றும் நலச் செலவுகளை எதிர்மறையாக பாதிக்கிறது. செலவினக் குறைப்பு சமூக நலத்திட்டங்களைக் குறைத்து வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை மூடுகிறது. முந்தைய ‘நல்லாட்சியின்’ கீழ், இலங்கை இதற்கு நேர்மாறாக நடவடிக்கைகளை மேற்கொண்டது: பற்றாக்குறையை ஈடுகட்ட வரிகளை அதிகரித்தது. செலவினம் தீண்டப்படாமல் விடப்பட்டதால் உண்மையில், தொடர்ந்து அதிகரித்தது.

துரதிர்ஷ்டவசமாக, அரசாங்க வருவாயின் பெரும்பகுதி நுகர்வு வரி குறிப்பாக சேர்பெறுமதி வரி வடிவத்தின் மூலம் வருகிறது, எனவே அதிகரித்த வரியின் சுமை பொது மக்கள் மீது எப்படியும் விழுந்தது, இது கடுமையான அதிருப்தியைத் தூண்டியது. வருமான வரியும் அதிகரிக்கப்பட்டது, வணிக சமூகத்தை கோபப்படுத்தியது. இவ்வாறு அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்ட தரப்பினரின் கோபத்திற்குள்ளாகி மற்றும் மிகவும் செல்வாக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

பொது நிதி ஓரளவு மேம்பட்டது, ஆனால் ஒருபோதும் வலுவடையவில்லை. 2019 ஏப்ரலில் நடந்த தாக்குதல்களால் விடயங்கள் மீண்டும் நழுவத் தொடங்கின. 2019 நவம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வானது "குறிப்பிடத்தக்க வருமானப் பற்றாக்குறையின் காரணமாக நிதி இலக்குகள் இனி அடைய முடியாது" என்று குறிப்பிட்டது.

2019 நவம்பர் மாத ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, புதிய அரசாங்கம் டிசம்பரில் பெரும் வரி வெட்டுக்களை அறிவித்தது. வரி அதிகரிப்பின் செல்வாக்கற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் விரக்திக்கு பதிலளிப்பது தவறு அல்ல, ஆனால் குறைப்புக்களின் விரிவானது வியக்க வைக்கிறது. பெருநிறுவன வருமான வரி 28% முதல் 24% வரை குறைக்கப்பட்டது, சேர்பெறுமதி வரியானது (VAT) 15% முதல் 8% வரை அரைவாசியாகக் குறைக்கப்பட்டது; நிறுத்தி வைத்தல் வரி, நாட்டைக் கட்டியெழுப்பும் வரி மற்றும் பொருளாதார சேவை கட்டணம் ஆகியன அகற்றப்பட்டன. சீர்குலைந்த பொருளாதாரத்திற்குப் புத்துணர்ச்சியளிப்பதே இதன் நோக்கமாகும், ஆனால் செலவானது - அரசாங்க வருவாயில் கால் பகுதி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-4% பொது நிதிகளை சீர்குலைத்தது.

2020 பெப்ரவரி 7 ஆம் திகதியன்று, சர்வதேச நாணய நிதியம்: “விரிவாக்கப்பட்ட நிதி வசதியினால் (EFF) ஆதரிக்கப்படும் திட்டத்தின் கீழ் முதன்மை மிகை இலக்கானது பலவீனமான வருமான செயல்திறன் மற்றும் அதிகமான செலவினங்கள் காரணமாக  2019 ஆம் ஆண்டில் கணிசமான அளவு வித்தியாசத்தால் தவறவிடப்பட்டதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவீத பற்றாக்குறையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.” நிதியின் படி, இலங்கையின் 2020 வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.9% ஆக உயரக்கூடும், இது 2015 இற்குப் பின்னரான மிக உயர்ந்த வீதமாகும். தொற்றுநோயைப் பொறுத்தவரை, இது நம்பிக்கையுடன் கூடியதாகும். 2019 ஆம் ஆண்டிற்கான பற்றாக்குறை 6.5% ஆக இருந்தது, ஆனால் நிதி அமைச்சின் கூற்றுப்படி, “2019 ஆம் ஆண்டிற்கான உண்மையான வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது 8 சதவீதத்திற்கு மேல் இருந்திருக்க வேண்டும்”, ஏனெனில் ரூபா .367 பில்லியன் செலவுகள் செலுத்தப்படாமலும், ஆண்டு முடிவில் கணக்கிடப்படாமலும் இருந்தன. 

இதற்கிடையில், தரப்படுத்தல் முகவராண்மைகள் ஃபிட்ச் (Fitch) மற்றும் எஸ் என்ட் பி (S&P) ஆகியன ‘நிலையானதாகவிருந்த’ இலங்கையின் கடன் பற்றிய கண்ணோட்டத்தை “எதிர்மறை” ஆகக் குறைத்தன. இலங்கையின் ஏற்கனவே தள்ளாடும் பொது நிதி இப்போது கொவிட்-19 இன் கூடுதலான பொருளாதார அதிர்ச்சியை சமாளிக்க வேண்டும். 

பொது சுகாதார அவசரநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய மனித செலவு ஆகியவற்றைக் கையாள்வது கொள்கை வகுப்பாளர்களின் மனதில் இருக்க வேண்டும். ஆயினும்கூட தெளிவான பார்வை கொண்ட பொருளாதாரச் சிந்தனையானது சமமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், மேலும் குறிப்பாக நமது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மனித செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால்தான் ஒரு முடக்கம் அல்லது முழுமையான ஊரடங்கு உத்தரவின் ஒப்பீட்டு செலவுகளை எடைபோடுவது முக்கியம்.

அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தலைவலி வெளிநாட்டுக் கடனை நிர்வகிப்பதாகும். மத்திய வங்கியின் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நடுத்தர கால கடன் மூலோபாயம் இனி இருக்காது என்ற அனுமானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது - நடுத்தர காலத்திற்கு 5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி, 5 சதவீத பணவீக்கம் மற்றும் வரவுசெலவுத் திட்டப் பறறாக்குறை 3.5 சதவீதம். நடுத்தர கால மூலோபாயம் சிதைவடையும் நிலையில், முதிர்ச்சியடைந்த கடனை அரசாங்கத்தால் நீடிக்க முடியுமா?

2020 பெப்ரவரியில் மொத்த ஒதுக்கங்கள் 4.6 மாத இறக்குமதிக்கு சமமான 7.9 பில்லியன் அமெரிக்க டொலரர்களாக இருந்தது. 2020 ஆம் ஆண்டில் வெளி கடன் திருப்பிச் செலுத்துதல் 5.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது சீனாவிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனால் பகுதியளவில் மீள்நிதியளிக்கப்பட்டுள்ளது, இது மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது . குறைந்தபட்சம் மூன்று மாத இறக்குமதியைப் பராமரிக்கும் அதே வேளையில், இந்த ஆண்டின் கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பினால் குறைந்தபட்சம் 2-2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட நாடு எதிர்பார்க்கிறது.

அதன் பொது நிதி ஒழுங்கீனங்கள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம் புரண்டதுடன் தவிர்க்க முடியாத கடன் தரமிறக்குதல் காரணமாக, கடன் வாங்க சந்தைக்கு திரும்புவது சாத்தியமில்லையென தரப்படுத்தல் முகவராண்மைகளினால் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாண்டு முதிர்ச்சியடையும் இலங்கையின் இறையாண்மை பத்திரங்களின் வருவாய் அதிகரித்துள்ளது. இதை எழுதும் நேரத்தில், முதலீட்டாளர்கள் தற்போதைய வருமானத்தில் 101 சதவிகித அதிகரிப்பினைக் கேட்கிறார்கள், அடுத்த ஆண்டு முதிர்ச்சியடையும் பத்திரங்கள் 44% ஆகும். ஒரு புதிய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் சந்தைகளுக்கு நம்பிக்கையை மீட்டெடுக்கும், ஆனால் இது வலிமிகுந்த இறுக்கத்திற்கு திரும்புவதைக் குறிக்கும். மேலும் பிணை எடுப்புகளுக்கு மேல்முறையீடு செய்வது மிகவும் கவர்ச்சிகரமான தெரிவாகும்.

கடன் நிவாரணம் கோரிய நாடுகளில் இலங்கையும் உள்ளது. இந்த அழைப்புக்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியன ஆதரவு அளித்துள்ளன. இந்த அழைப்பு ஏழ்மையான நாடுகளுக்கானது என்றாலும், இந்த அமைப்புகள் சமீபத்தில் இலங்கை போன்ற உயர் நடுத்தர வருமான வகையாக மாற்றப்பட்ட நாடுகளை பரிசீலிக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. சில விமர்சகர்கள் அரசாங்கம் எளிதாக மீளச்செலுத்தாதிருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். இது எளிதாகத் தோன்றினாலும், வணிகக் கடனை மறுசீரமைப்பது கூட ஆபத்தானதாகும்: திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைப்பது அல்லது குறைப்பது சந்தைகளால் திருப்பிச்செலுத்தத் தவறும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது, அதாவது சிறிது காலத்திற்கு சந்தைகளுக்குத் திரும்புவது கடினமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, முதலீடு மற்றும் தனியார் துறை கடன் பொதுவானதாக இருப்பதால் இது பொருளாதாரத்திற்கு ஒரு அதிர்ச்சியை அளிக்கிறது. இது வங்கி தோல்விக்கு வழிவகுத்து நிதித் துறை பாதிக்கப்படலாம்.

1998-2000 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன், ஈக்வடோர் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் மறுசீரமைப்புகளை உள்ளடக்கிய மறுசீரமைப்பின் விளைவுகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு 2002 இனால்  காட்டப்பட்டது:

"உண்மையான வருமானம் மற்றும் நிதியுதவியின் வீழ்ச்சி உள்நாட்டுக் கேள்விக்குப் பரவியது. நம்பிக்கை சரிந்ததுடன் தனியார் முதலீடு கடுமையாக குறைக்கப்பட்டது. தனியார் நுகர்வில் ஒரு பின்னடைவுடன் இருந்தாலும், சிறிது காலத்திற்கு குடும்பங்கள் தங்களுடைய சேமிப்பிலிருந்து பணத்தை மீளப்பெற்றன. பொது நிதிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் பொது நுகர்வு குறைக்கப்பட்டது. பரிமாற்றக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மூலதன உள்ளீடுகள் குறைந்ததன் விளைவாக வெளிநாட்டு நிதிகளின் பற்றாக்குறையை பிரதிபலிக்கும் மாற்று விகிதங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. உள்நாட்டுக் கேள்வி குறைந்தமை மற்றும் இறக்குமதிப் பிரதியீடு ஆகியன நடைமுறைக் கணக்குகளை மேம்படுத்த உதவின. நாணய மாற்றுத் தேய்மானம் விலைகளுக்கு விரைவாகச் சென்று பணவீக்கம் அதிகரித்தது. ஊதியங்கள் குறைவடைந்துள்ளதுடன், பணவீக்கம் வைப்புகளின் பெறுமதியை அழித்துவிட்டது, வேலையின்மை அதிகரித்ததுடன் குடும்பங்கள் கணிசமான உண்மையான வருமான இழப்புகளை சந்தித்தன. ”

இலங்கை இவ்வாறு திறமையாகக் கையாளுவதற்கு வாய்ப்புக்கள் குறைந்த  ஒரு தந்திரமான நிலையில் தன்னைக் காண்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு கொவிட்-19 மட்டும் காரணமிட்டாவிட்டாலும் இது விடயங்களை மிகவும் மோசமாக்கியுள்ளது. தொற்றுநோய் பல தசாப்தங்களாக வளர்ந்து வரும் கொள்கை பலவீனங்களை ஒரே நேரத்தில் வளர்ச்சி, நிதி மற்றும் வெளித் துறைகளை உள்ளடக்கிய ஒரே மாபெரும் அதிர்ச்சியாக மாற்றிவிட்டது.

சர்வதேச மூலதன சந்தைகளுக்கான அணுகல் ஒப்பீட்டளவில் குறுகிய வரலாற்றைப் பின்பற்றி, உள்நாட்டு கொள்கை குறைபாடுகள் மற்றும் வெளிநாட்டு அதிர்ச்சிகளாகிய: ஆசிய நெருக்கடிக்குப் பின்னரான சாதகமற்ற வெளிப்புற சூழலுக்கு மேலதிகமான ரஷ்யா மற்றும் ஈக்வடோர் நாடுகளுக்கான பலவீனமான எண்ணெய் விலைகள், அணுசக்தி சோதனையைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான  சர்வதேச தடைகள், ஈக்வடோரிற்கான எல்-நினோ விளைவு, உக்ரேனுக்கான ரஷ்யாவின் கொந்தளிப்பு ஆகியவற்றினால் பேரினப் பொருளாதார நிலைமை ஸ்திரமின்மைக்கு உட்பட்டமையும்  மேலே குறிப்பிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வின் ஒரு  விடயமாக இருந்தது

குறுகிய காலத்தில்  பிணை எடுப்புக்கள் அவசியமாக இருக்கும், ஆனால் இது பிரச்சினைகளை பின்னர் மிக தொலைவிலுள்ள திகதியன்றுக்கு ஒத்திவைக்கும் ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமேயாகும். கொவிட்-19 நெருக்கடியின் உலகளாவிய தன்மையைக் கருத்தில் கொண்டு, சீனாவிலிருந்து மேலும் இரு-பக்கக் கடன்கள் சாத்தியமாக இருக்கும்போது, ​​மேலும் இரு-பக்க உதவி ஒரு யதார்த்தமான விருப்பமாக இருக்காது. இது 1 டிரில்லியன் டொலர் கடன்பெறும்  இயல்திறனுடன், ஒரு சர்வதேச நாணய நிதியத் திட்டமானது மேலும் கடன் பெறுவதற்கான ஒரே யதார்த்தமான தெரிவினை வழங்குகிறது.

மறுதலிக்கும் நிலையில் வாழ்ந்து வரும் அரசியல்வாதிகள் மற்றும் குடிமக்கள் கடுமையான யதார்த்தங்களை எழுப்ப வேண்டும். தேர்தலுக்கு முந்தைய துணிச்சலும் நீண்டகாலமாக நிலவிய சதித்திட்டக் கோட்பாடுகளும் உலகளாவிய நிதி நிறுவனங்களுடனான நடுநிலையான சிந்தனை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்காக களைந்தெறியப்பட வேண்டும். ஒரு பங்கினை வகிப்பதற்கு வலுவூட்டப்பட்ட அனைத்து சட்டரீதியான நிறுவனங்களுடனும் கலந்தாலோசித்து பொருளாதார முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட் வேண்டும்.

தவறுகள் செலவு மிக்கவையானதுடன் கொவிட்-19 தொற்றுநோய் பரவலை கடுமையான பொது சுகாதார நெருக்கடியிலிருந்து பேரழிவுகரமான பொருளாதார நெருக்கடியாக மாற்றும் அபாயத்திற்கு இட்டுச் செல்லக்கூடும்.