middleeast

பெண்களின் தொழிற்படைப் பங்கேற்பு ஏன் குறைகிறது?

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகும் குறைந்து வரும் பெண் தொழிலாளர் பங்கேற்பு

"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்."

-மகாகவி பாரதியார்-

நூறு ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதியார் பெண்கள் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற கனவை வெளிப்படுத்தினார். பெண்கள் கல்வி பெறுவதும், பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பதும், நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பதும் ஒரு முன்னேற்றமான சமூகத்தின் அடையாளமாகும். ஆனால், இன்றைய இலங்கையின் பொருளாதார நிலையைப் பார்க்கும்போது, நாட்டின் மொத்த மனித வளத்தில் பாதிக்கும் அதிகமானவர்களாக இருக்கும் பெண்களின் பொருளாதார பங்கேற்பு இன்னும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. குறிப்பாய், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது, இலங்கையின் உற்பத்தித்திறன், வருமான உருவாக்கம் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய சவாலாக மாறியுள்ளது.

பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் சமூகப் பங்கேற்பை அளவிடும் Women Peace and Security Index (WPS Index) 2025/2026 அறிக்கையின்படி, டென்மார்க் 0.94 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தான் 0.28 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன. இலங்கை 0.70 புள்ளிகளுடன் 181 நாடுகளில் 77ஆவது இடத்தில் உள்ளது. இது இலங்கை பெண்களின் நிலை சில துறைகளில் முன்னேற்றமடைந்திருந்தாலும், பொருளாதார வாய்ப்புகள் தொடர்பாக இன்னும் பல தடைகள் இருப்பதை காட்டுகின்றது.

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது இயற்கை வளங்கள் அல்லது மூலதனம் மட்டும் அல்ல. அந்த நாட்டின் மனித வளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதிலும் தங்கியுள்ளது. வேலை செய்யக்கூடிய வயதில் உள்ள மக்கள் தொகை பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது உற்பத்தி அதிகரிக்கிறது, வருமானம் உருவாகிறது, வரி வருவாய் அதிகரிக்கிறது மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் தொழிலாளர் படையில் உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர். பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Female Labour Force Participation Rate - FLFPR) என்பது, ஒரு நாட்டில் வேலை செய்யும் வயதில் உள்ள மொத்த பெண்களில், வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர் என்பதைக் காட்டும் பொருளாதாரக் குறியீடு ஆகும்.

தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களம் (DCS) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றின் கணிப்பின் படி இலங்கையில் 2024ஆம் ஆண்டில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 29.8 சதவீதம் மட்டுமே ஆகும். அதாவது, வேலை செய்யக்கூடிய 100 பெண்களில் சுமார் 30 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேடுகின்றனர். மீதமுள்ள பெரும்பாலான பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடவில்லை. 2017ஆம் ஆண்டில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 36.6 சதவீதமாக இருந்த நிலையில், அது 2024ஆம் ஆண்டில் 29.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி இலங்கையின் மனித மூலதனம் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு குறைவதற்கான காரணம் அவர்களிடம் திறமை அல்லது கல்வி இல்லாதது அல்ல. இலங்கையில் பெண்களின் கல்வி நிலை கடந்த பல ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், கல்வி பெற்ற பெண்களுக்குக் கூட வேலைவாய்ப்பில் சவால்கள் காணப்படுகின்றன. 2024ஆம் ஆண்டில் பெண்களின் வேலையில்லா விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது. அதேவேளை, ஆண்களின் வேலையில்லா விகிதம் 3 சதவீதமாகக் காணப்பட்டது. மேலும், உயர்தரப் பரீட்சை அல்லது அதற்கு மேல் கல்வி பெற்ற பெண்களில் வேலையில்லா விகிதம் 10.3 சதவீதமாக உள்ளது. இது கல்வி மட்டுமே போதுமானது அல்ல, பெண்கள் வேலை சந்தையில் இணைவதற்குத் தேவையான சமூக மற்றும் பொருளாதார சூழலும் உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன பெண்களின் இந்தத் தொழிலாளர் பங்களிப்பு குறைந்தடைந்தமைக்கு பிரதானமான 3 விடயங்களை அடையாளம் கண்டுள்ளன:

  1. ஊதியமில்லாத பராமரிப்புப் பணிகள்:

    பெண்கள் தொழிலாளர் சந்தையில் குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று வீட்டுப் பொறுப்புகளின் சமமற்ற பகிர்வு ஆகும். குழந்தைகளைப் பராமரித்தல், வீட்டுப் பணிகள், வயதான குடும்ப உறுப்பினர்களைப் பார்த்துக்கொள்ளுதல் போன்ற பணிகள் பெரும்பாலும் பெண்கள் மீதே சுமத்தப்படுகின்றன. இவை பொருளாதார ரீதியாக மதிப்புள்ள பணிகளாக இருந்தாலும், அவற்றுக்கு நேரடி வருமானம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, பல பெண்கள் வேலைவாய்ப்பைத் தொடர முடியாமல் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறுகின்றனர். இது ஒரு தனிநபர் பிரச்சினை மட்டும் அல்ல; நாட்டின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் பொருளாதார இழப்பாகும். ஆனால், டென்மார்க், சுவீடன், நோர்வே போன்ற நோர்டிக் நாடுகளில், குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு மட்டுமல்ல, தந்தைக்கும் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு வழங்கப்படுகிறது. இதனால் குழந்தை பராமரிப்புப் பொறுப்பு இருவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

  2. குழந்தை பராமரிப்பு வசதிகளின் குறைபாடு:

    பெண்கள் வேலைக்குச் செல்லும் முடிவில் குழந்தை பராமரிப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கையில் தரமான மற்றும் குறைந்த செலவிலான குழந்தை பராமரிப்பு மையங்கள் போதுமான அளவில் இல்லை. இதனால், குழந்தை பெற்ற பின்னர் பல திறமையான பெண்கள் வேலைவாய்ப்பை விட்டுவிடுகின்றனர். மாறாக, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளில் அரசு ஆதரவுடன் குழந்தை பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுவதால், பெண்கள் குடும்பப் பொறுப்புகளையும் தொழில் வாழ்க்கையையும் சமநிலைப்படுத்த முடிகிறது.

  3. பாதுகாப்பற்ற போக்குவரத்து:

    பெண்கள் வேலைக்குச் செல்வதில் பாதுகாப்பு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாய் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் பயணம் செய்ய வேண்டிய வேளைகளில் பாதுகாப்பு குறித்த அச்சம் காணப்படுகிறது. பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து மற்றும் பெண்களுக்கு ஏற்ற வேலை சூழல் இல்லாதது, பல பெண்களின் வேலைத் தேர்வுகளைக் குறைக்கிறது.

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு குறைவதால் ஏற்படும் மிகப்பெரிய விளைவு நாட்டின் உற்பத்தித் திறன் குறைவதாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். பொருளாதாரத்தில் அதிகமான மக்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரிக்கும். இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் சுமார் 52 சதவீதம் உள்ளனர். 2024 மதிப்பீட்டின்படி இலங்கையின் மக்கள் தொகை சுமார் 21.9 மில்லியன் ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை சுமார் 11.4 மில்லியன் ஆகும். ஆனால், இவ்வளவு பெரிய மனித வளம் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. இது நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வுகளின்படி, பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்க முடிந்தால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) சுமார் 21 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் வேலைவாய்ப்பு என்பது பெண்களின் தனிப்பட்ட முன்னேற்றம் மட்டும் அல்ல, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடு என்பதும் தெளிவாகிறது.

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்க பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் அவசியமாகின்றன. அவையாவன: குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்; குறைந்த செலவில் தரமான குழந்தை பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்; பெண்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் (இது பெண்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்); நவீன தொழில் சந்தைக்கு ஏற்ப நெகிழ்வான வேலை நேரம், தொலைதூர வேலை வாய்ப்புகள் போன்ற முறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும், குடும்பப் பொறுப்புகள் பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற பாரம்பரிய அணுகுமுறை மாற்றப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது அவசியம்.

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு குறைவது ஒரு சமூகப் பிரச்சினை மட்டும் அல்ல; அது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கியமான பொருளாதாரச் சவாலாகும். பெண்கள் வேலைவாய்ப்பில் இணைந்தால் குடும்ப வருமானம் அதிகரிக்கும், வறுமை குறையும், மனித மூலதனம் மேம்படும் மற்றும் நாட்டின் உற்பத்தித்திறன் உயரும். மகாகவி பாரதியார் கண்ட கனவு போல, பெண்கள் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்றால், அவர்களுக்குச் சமமான பொருளாதார வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பெண்களின் முன்னேற்றம் என்பது ஒரு சமூக நீதிக்கான நடவடிக்கை மட்டும் அல்ல; அது இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை முதலீடாகும்.

ஆக்கம்:- ஹபிலாஷினி யோகேஷ்வரன்

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

America வின் அடுத்த target Malacca நீரிணையா?

ஹோர்முஸ் (Hormuz) நீரிணை மூடப்பட்டதன் காரணமாக, தற்காலத்தில் உலகெங்கிலும் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. சுருக்கமாகக் கூறினால், இலங்கையில் மீண்டும் ஒருமுறை ஒதுக்கீட்டு முறை (Quota System) மற்றும் QR குறியீடு (QR System) முறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது. இந்த நெருக்கடியின் காரணமாக, இந்த ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2% வரை குறையக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. 

பொதுவாக நீரிணை என்பது, இரண்டு பெரிய கடல் பகுதிகளை ஒன்றாக இணைக்கின்ற குறுகலான, இயற்கையான நீர்ப்பாதையைக் குறிக்கும். இத்தகைய நீரிணைகளுக்குப் புவிசார் அரசியல் ரீதியாகவும், உத்தி (Strategy) ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இதன் காரணமாகவே இவை முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. சர்வதேச வர்த்தகம் மூலமாக நாடுகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற இன்றைய உலகில், வெளியுறவுக் கொள்கையில் இதொரு முக்கியமான கருவியாகத் திகழ்கிறது. அத்தகைய மற்றுமொரு முக்கியமான நீரிணைதான் மலாக்கா (Malacca) நீரிணை ஆகும். 

ஹோர்முஸ் நீரிணையைப் போலவே மலாக்கா நீரிணை குறித்தும் தற்போது அமெரிக்கா மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றது. 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் மலாய் கடற்கரையில் அமைந்திருந்த மெலாக்கா/மலாக்கா வர்த்தகத் துறைமுகத்தின் மூலமாகவே இதற்கு இப்பெயர் கிடைத்தது. 900 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நீரிணை, இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கின்ற ஒரு கடல் பாதையாகும். இதற்கு மேற்குப் பகுதியில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவும், கிழக்கில் மலேசியாவும், தெற்கில் தாய்லாந்தும் அமைந்துள்ளன. எனவே, மலாக்கா நீரிணையின் முக்கியமான எல்லை நாடுகளாக மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை விளங்குகின்றன. 

இந்த நீரிணையின் வடக்கு நுழைவாயிலில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் இந்தியாவின் அந்தமான்-நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளதால், மலாக்கா நீரிணை இந்தியாவிற்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்தியாவின் வர்த்தகத்தில் ஒரு பெரும் பகுதி இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. 

2026 மார்ச் மாதம் அமெரிக்கா, இந்தோனேசியாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதன் மூலமாக அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு இந்தோனேசிய வான்வெளியில் முன்னரை விட அதிகமாக நடமாடுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதன் விளைவாக, மலாக்கா நீரிணை வழியாக அமெரிக்காவின் கண்காணிப்புப் பணிகளையும் கட்டுப்பாட்டையும் மேலும் அதிகப்படுத்த முடியும். அமெரிக்கா ஏன் இத்தகைய ஒப்பந்தத்தைப் போட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், மலாக்கா நீரிணையின் முக்கியத்துவத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 

உலகில் உள்ள இரண்டாவது பரபரப்பான எண்ணெய் போக்குவரத்துப் பாதையாக மலாக்கா நீரிணை கருதப்படுகிறது. முதலிடத்தில் ஹோர்முஸ் நீரிணை உள்ளது. மலாக்கா நீரிணையின் அகலம் மிகக் குறைவாக உள்ள இடமே 3 கிலோமீட்டர் மட்டும்தான். கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய்களில் 22% முதல் 29% வரை இந்த மலாக்கா நீரிணை வழியாகவே செல்கிறது. அதேபோல, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளைத் தாண்டிச் செல்லும் வர்த்தகக் கப்பல்களில் 25% முதல் 30% வரை இந்த நீரிணை வழியாகவே பயணிக்கின்றன. 

வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அமெரிக்கா தற்போது போரைக் கடந்து அதற்கு மேலான ஏதோ ஒன்றிற்குத் தயாராகி வருவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். லாபமில்லாமல் எவரும் எதையும் செய்யப் போவதில்லை. ஆயுதங்களால் போர் செய்வதைக் காட்டிலும், எண்ணெய் விநியோகப் பாதைகளைத் தடுத்து, எதிரியான சீனாவின் பலத்தை உடைத்து, அவர்களை விட ஒரு படி மேலே செல்வதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அனைத்து நாடுகளுக்கும் வரி விதித்திருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெனிசூலா மற்றும் ஈரானின் மீது ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றைக் கவனிக்கும்போது, மலாக்கா நீரிணையில் தலையிடுவது சீனாவிற்கும் ஒட்டுமொத்த ஆசியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

ஹோர்முஸ் நீரிணையைப் போலன்றி, மலாக்கா நீரிணை வழியாக எண்ணெய் மட்டுமின்றி வாகனங்கள், முடிவுற்ற பொருட்கள் (Finished goods) மற்றும் குறைக்கடத்திகள் (Semiconductors) போன்றவையும் கொண்டு செல்லப்படுகின்றன. சீனாவைத் தவிர்த்து தென்கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தித் தேவையில் 80% வரை இந்த மலாக்கா நீரிணை மூலமாகவே பூர்த்தியாகிறது. இந்த நீரிணையை அளவுக்கு அதிகமாக நம்பியிருப்பது சீனாவின் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகும். எனவே, என்றாவது ஒரு நாள் இந்த நீரிணை காரணமாகத் தங்களுக்குப் பெரிய அரசியல் ஆபத்து வரும் என்பதைச் சீனா முன்னரே உணர்ந்திருந்தது. இதனைத்தான் 'மலாக்கா தர்மசங்கடம்' (Malacca Dilemma) என்று அழைக்கிறார்கள். 

ஹோர்முஸ் மற்றும் மலாக்கா ஆகிய இரண்டு நீரிணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவற்றிற்கு இடையிலான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை வைத்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். ஹோர்முஸ் நீரிணை ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையில் அமைந்துள்ளது. ஆனால் மலாக்கா நீரிணை மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் உள்ளது. முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நுழைவாயிலாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது. மலாக்கா நீரிணை ஆசியாவின் வர்த்தகத்திற்கும் எரிசக்திக்கும் ஒரு முக்கியப் பாதையாக (Energy Corridor) உள்ளது. 

எண்ணெய் போக்குவரத்தைப் பொறுத்தவரை, உலகின் மொத்த திரவ பெட்ரோலியப் பயன்பாட்டில் 20% முதல் 25% வரை ஹோர்முஸ் வழியாக நடைபெறுகிறது. அதேபோல உலகக் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் 29% மலாக்கா நீரிணை வழியாக நடைபெறுகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட அடுத்த கணமே அதன் பாதிப்பு காட்டுத்தீயைப் போல உலகம் முழுவதும் பரவியது. அதற்கு முக்கியக் காரணம், ஹோர்முஸ் நீரிணைக்குப் பதிலாகப் பயன்படுத்த வேறு மாற்று வழிகள் (Alternative routes) இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி, சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஈராக் மற்றும் கத்தார் போன்ற முக்கியமான எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல இருக்கும் ஒரே வழி இந்த ஹோர்முஸ் நீரிணை மட்டும்தான். 

மலாக்கா நீரிணை சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவின் பொருளாதாரங்களுக்கு மிக முக்கியமானது. ஒருவேளை இந்த நீரிணை மூடப்பட்டாலும் கூட, இந்தோனேசியாவின் சுண்டா (Sunda) மற்றும் லொம்போக் (Lombok) போன்ற மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த முடியும். ஆனால் அவற்றில் உள்ள சிக்கல் என்னவென்றால், அந்தப் பாதைகளில் பயணிப்பதற்கு அதிக தூரமும் நேரமும் செலவாகும். இதனால் கொண்டு செல்லப்படும் பொருட்களின் விலையும் உயரும். 

இந்த இரண்டு நீரிணைகளையும் சுற்றியுள்ள ஆபத்துகளைப் பார்க்கும்போது, ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி எப்போதும் புவிசார் அரசியல் மோதல்கள் (Geopolitical conflicts) நிலவுகின்றன. ஆனால் மலாக்கா நீரிணையில் கடல் கொள்ளையர்கள் (Piracy) மற்றும் கப்பல் போக்குவரத்து நெரிசல் (Congestion) ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த இரண்டில், ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமானது பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்பாகும். ஏனெனில் போர் அல்லது கொள்கை மாற்றங்கள் என உலகில் எங்கு என்ன நடந்தாலும், அதன் பாதிப்பு முதலில் நமது பொருளாதாரத்தையே (Pocket) பாதிக்கும். அதனால்தான் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டவுடன் உலக அளவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அதேபோல மலாக்கா நீரிணைக்கு ஏதேனும் தடை ஏற்பட்டால், அது எண்ணெய்க்கு மட்டுமின்றி ஆசியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்திற்கே ஒரு பெரிய முட்டுக்கட்டையாக அமையும். 

ஆக்கம்:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

மத்திய கிழக்கால் இலங்கைக்கு ஆகப்போவது என்ன?

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடிகள் குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை ஊடகங்களில் முக்கியச் செய்தியாக (Breaking News) ஏதேனும் ஒரு புதிய தகவல் வந்தவண்ணமே உள்ளது. ஆனால் நாம்? போரின் ஆழமான பின்னணிகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே, அச்சப்படத் தேவையில்லை என்றும் அடுத்த மாதம் வரை போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும் அரசாங்கம் உறுதியளித்த பின்னரும், எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று பதற்றத்துடன் எரிபொருளைக் கொள்வனவு (Panic Buying) செய்யத் தொடங்கிவிட்டோம்.

இந்த நெருக்கடிக்கெல்லாம் அடிப்படைப் பின்னணி என்னவென வினவினால், அணு ஆயுத உற்பத்தியும் அதனால் எழும் அச்சுறுத்தலுமே காரணங்கள் எனக் கூறப்படுகிறது. எனினும், இதற்கான உண்மையான காரணத்தை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்கக்கூடும். இதன் பின்னணியில் நுணுக்கமான அரசியலும் அதிகாரப் போட்டிகளும் அடங்கியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்த போரினால் ஏற்படக்கூடிய பாரிய மாற்றங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதைச் சுருக்கமாக ஆராயவுள்ளோம்.

இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் உருவாகும்போது, உடனடியாக எரிபொருள் விலை உயரும் அல்லது தட்டுப்பாடு ஏற்படும் என்பதுதான் நம் அனைவரது முதல் எண்ணமாக இருக்கிறது. இதனால்தான் மக்கள் அச்சமடைந்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கத் தொடங்குகிறார்கள். இது கண்களுக்குத் புலப்படும் ஒரு நேரடிப் பாதிப்பாக இருந்தாலும், இதற்கு அப்பால் நாம் கவனிக்கத் தவறும் அல்லது மறந்துவிடும் சில முக்கியப் பொருளாதாரக் காரணிகளும் உள்ளன.

முதலாவதாக, அந்த நாடுகளில் பணிபுரியும் மக்களும், அதன் விளைவாகப் பாதிக்கப்படவுள்ள நமது வேலைவாய்ப்புச் சந்தையும் (Job Market). கிட்டத்தட்ட, 1 மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கை மக்கள் Gulf Cooperation Council (GCC) countriesகளில், அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் வெளியான புள்ளிவிவரங்களின்படி, பல்வேறு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் விபரங்கள் பின்வருமாறு:

நாடு பணியாளர்களின் எண்ணிக்கை
ஐக்கிய அரபு அமீரகம்(UAE)  350,000
சவூதி அரேபியா  246,139
குவைத்  175,000
கத்தார்  140,000
ஓமான்  32,000
ஜோர்டான்  14,500
பஹ்ரைன்  13,130

இத்தனை பேரின் வாழ்வாதாரமும் உயிரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, அவர்களால் இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் (Remittance) பெருமளவில் பாதிக்கப்படும். இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பில் முக்கியமான எலும்பு தான் இந்த remittance பணம். 2025 ஆம் ஆண்டில் மட்டும் 8 பில்லியன் டாலர் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டிற்குள் வரும் பணம் வங்கிகளில் வெறும் இருப்பாக மட்டும் தங்கிவிடுவதில்லை; மாறாக, கிராமப்புறங்களில் வீடுகள் கட்டுவதற்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும் அது பெரும் உதவியாக இருக்கின்றது. இந்தப் போர்ச் சூழல் நீடிக்குமாயின், இலங்கைக்குப் பணம் அனுப்புவதை விடத் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அங்குள்ளவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள். இதன் விளைவாக, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை நம்பியிருக்கும் இலங்கைக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். அதேவேளை, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில், இலங்கையின் வேலையின்மை விகிதம் 3.8 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தப் போர் காரணமாக, இனிவரும் காலங்களில் வளைகுடா நாடுகளுக்குப் பணி நிமித்தமாகச் செல்லவிருப்போரின் பயணங்களும் தடைப்படக்கூடும். இவ்வாறு வேலைவாய்ப்புகள் சுருங்குவதால், இலங்கையில் வேலையின்மைப் பிரச்சினையின் தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மற்றொருபுறம், அங்கு பணிபுரியும் மக்கள் பாதுகாப்பு நிமித்தமாக மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அதனால் ஏற்படும் வருமான இழப்பையும், வேலையற்ற நிலையில் உள்வாங்கப்படும் அதிகப்படியான மக்களையும் நாம் கையாள வேண்டியிருக்கும்.

அடுத்ததாக, சுற்றுலாத்துறையில் (Tourism Industry) ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துப் பார்ப்போம். சுற்றுலாத்துறையைத் தனது பிரதான வருமான ஆதாரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ள இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு, இந்தப் போர்ச் சூழல் மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் மேலைத்தேயநாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு துபாய் (Dubai), தோஹா (Doha) மற்றும் அபுதாபி (Abu Dhabi) போன்ற வளைகுடாப் பிராந்தியங்களே Transit points ஆக விளங்குகின்றன. அதேபோல், நாம் இலங்கையிலிருந்து மேலைத்தேயநாடுகளுக்குப் பயணிப்பதற்கும் மத்திய கிழக்குப் பகுதிகளையே Transit points ஆகப் பயன்படுத்துகின்றோம். எனவே, இந்தப் போர்க்கால நிலைமையால் கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways), எமிரேட்ஸ் (Emirates) மற்றும் எட்டிஹாட் (Etihad) போன்ற முன்னணி விமானச் சேவை நிறுவனங்கள் தமது பல விமானப் பயணங்களை ரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ கூடும். ஏற்கனவே சில விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சுற்றுலாத்துறை மட்டுமன்றி, தளவாடங்கள் மற்றும் சரக்குக் போக்குவரத்து (Logistics and Cargo transport) உள்ளிட்ட வான்வழிப் போக்குவரத்து மூலம் கிடைக்கக்கூடிய வருமானங்களையும் நாம் இழக்க நேரிடும். இது இறுதியில் இலங்கை ரூபாயின் ஸ்திரத்தன்மையிலும் (Stability) நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அடுத்ததாக, எமது வர்த்தக வருமானம் (Trade Income) பற்றிப் பார்ப்போம். ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற நாடுகள் இலங்கையின் தேயிலையை கொள்வனவு செய்யும் மிக முக்கியமான நாடுகளாகத் திகழ்கின்றன. எனவே, இந்த யுத்தச் சூழலால் அந்த நாடுகளின் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது (Market Collapse), அது எமது நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை நேரடியாகப் பாதிக்கும். அத்துடன், இந்தப் பாதிப்பை ஈடுகட்ட நாம் புதிய சந்தைகளைத் தேட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாவோம். இன்றைய நிலையில் அதுவும் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.

தற்போதைய சூழலில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடிவிட்டது; இதன் காரணமாக இலங்கைக்கு எரிபொருள் தாங்கிய கப்பல்கள் வந்து சேராது, நாட்டில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகும் (வரிசை யுகம்), மின்சாரத் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டு நாடு இருளில் மூழ்கும் மற்றும் பொருளாதாரம் சரிவடையும் என்றெல்லாம் செய்திகள் பரவுகின்றன.

மக்கள் மீண்டும் சொல்லொணாத் துயரங்களை விரும்பியோ விரும்பாமலோ அனுபவிக்கப் போகிறார்கள் எனும் செய்தியை ஒரு தரப்பினர் பரப்ப விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ, இவ்வாறான விபரீதங்கள் உண்மையாகவே நடந்துவிடுமோ என்று மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்தால் எண்ணெய் விநியோகம் முழுமையாக ஸ்தம்பிதமடையும் என்றும், நாட்டில் பயன்பாட்டிற்கு ஒரு சொட்டு எரிபொருள் கூட எஞ்சியிருக்காது என்றும் பலரும் கருதுகின்றனர்.

இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெயின் பெரும்பகுதி ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளிலிருந்தே பெறப்படுகின்றது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் சிங்கப்பூர் அல்லது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

எனவே, தற்போது பெரும் விவாதத்திற்குள்ளாகியிருக்கும் ஈரானுக்கு அருகிலுள்ள 'ஹோர்முஸ் நீரிணை' (Strait of Hormuz) வழியாகவே எமது எரிபொருள் தாங்கிய கப்பல்கள் கட்டாயம் வர வேண்டும் என்பதில்லை. அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளும் தற்போது போர்ச் சூழலுக்கு அப்பாற்பட்ட மாற்றுப் பயணப் பாதைகளையே பயன்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, ஒருவேளை போர் மூண்டாலும் எரிபொருள் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% முதல் 30% வரையான அளவு ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகவே நடைபெறுகின்றது; குறிப்பாக சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விநியோகம் இந்தப் பாதையையே நம்பியுள்ளது. ஈரானிய நெருக்கடி காரணமாக இந்த நீரிணை வழியிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டால், உலகளாவிய ரீதியில் எண்ணெய் விநியோகம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தச் சந்தர்ப்பத்தில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிகக் கடுமையாக உயரும். இலங்கை தனது இறக்குமதிக்கு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தினாலும், சர்வதேச சந்தையில் நிலவும் அந்தப் பாரிய விலை அதிகரிப்பிற்கு ஏற்பவே எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். விநியோகப் பாதை வேறாக இருந்தாலும், சர்வதேச சந்தை விலையின் தாக்கத்திலிருந்து நாம் தப்ப முடியாது.

இலங்கையைப் பொறுத்தவரை மிகப்பாரிய சிக்கல் என்னவெனில், உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயரும்போது, மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்காக நாம் பெருமளவிலான டொலர்களைச் செலவிட வேண்டியிருக்கும். இது எமது வெளிநாட்டுச் செலாவணி கையிருப்புக்கு (Foreign Exchange Reserves) கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையைக் கட்டுப்படுத்தத் தவறினால், நாட்டில் மீண்டும் டொலர் பற்றாக்குறை உருவாகக்கூடிய அபாயம் உள்ளது. தற்போதைய சூழலில் நேரடிப் பாதிப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும், இலங்கை இப்போதுதான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது. இத்தருணத்தில் ஏற்படும் இவ்வாறான உலகளாவிய நெருக்கடிகள், 'மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய' கதையாக மாறி, எமது பொருளாதார மீட்சியை மீண்டும் சீர்குலைத்துவிடக் கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உருவானால், அந்தப் பிராந்தியத்தின் ஊடாகச் செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணங்கள் (Insurance Premium) மற்றும் இதர கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இந்தக் காப்பீட்டுத் தொகையானது மிகச் சிறியது அல்ல; மாறாக அது ஒட்டுமொத்தப் போக்குவரத்துச் செலவில் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கக்கூடியது. இவ்வாறு அதிகரிக்கப்படும் கூடுதல் செலவுகள் அனைத்தும், இறுதியாக இலங்கையில் நுகர்வோர் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளின் விலையுடனேயே சேர்க்கப்படும்.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையமானது ஆரம்பத்தில் Iranian Light வகை மூல எண்ணெயைச் சுத்திகரிப்பதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டது. சர்வதேசத் தடைகள் காரணமாக நாம் தற்போது ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை என்றாலும், ஒரு நெருக்கடி காலத்தில் சபுகஸ்கந்தவின் தொழில்நுட்பக் கட்டமைப்பிற்குப் பொருந்தக்கூடிய மாற்று மூல எண்ணெயை (Alternative Crude Oil) விரைவாகக் கண்டறிவது என்பது எளிதான காரியம் அல்ல.

ஆக மொத்தத்தில், இலங்கைக்குப் பாரிய ஆபத்து என்பது கப்பல்கள் தடைப்பட்டு எரிபொருள் இல்லாமல் போவது அல்ல; மாறாக, உலகச் சந்தையில் எண்ணெயின் விலை உயர்ந்து எமது பொருளாதாரச் சுமை அதிகரிப்பதே ஆகும். 

எது எப்படியோ, அடுத்த ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எனவே, எவரும் உச்சந்தலையைப் பிளக்கும் இந்தப் பங்குனி வெயிலில் தேவையற்ற முறையில் வரிசைகளில் நின்று காலத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. 

இருப்பினும், தனது வாகனத்தின் எரிபொருள் கலனை (Tank) நிரப்பிக் கொண்டால் மட்டும் போதும், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நெருக்கடியும் தீர்ந்துவிடும் என்று நினைக்கும் விசித்திரமான மனிதர்கள் வாழும் நாடு இது. இத்தகைய மனப்பாங்கு கொண்டவர்களைத் திருத்துவது என்பது எப்போதும் ஒரு சவாலான காரியமே.

ஆக்கம்:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.