malacca strait

பெண்களின் தொழிற்படைப் பங்கேற்பு ஏன் குறைகிறது?

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகும் குறைந்து வரும் பெண் தொழிலாளர் பங்கேற்பு

"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்."

-மகாகவி பாரதியார்-

நூறு ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதியார் பெண்கள் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற கனவை வெளிப்படுத்தினார். பெண்கள் கல்வி பெறுவதும், பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பதும், நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பதும் ஒரு முன்னேற்றமான சமூகத்தின் அடையாளமாகும். ஆனால், இன்றைய இலங்கையின் பொருளாதார நிலையைப் பார்க்கும்போது, நாட்டின் மொத்த மனித வளத்தில் பாதிக்கும் அதிகமானவர்களாக இருக்கும் பெண்களின் பொருளாதார பங்கேற்பு இன்னும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. குறிப்பாய், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது, இலங்கையின் உற்பத்தித்திறன், வருமான உருவாக்கம் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய சவாலாக மாறியுள்ளது.

பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் சமூகப் பங்கேற்பை அளவிடும் Women Peace and Security Index (WPS Index) 2025/2026 அறிக்கையின்படி, டென்மார்க் 0.94 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தான் 0.28 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன. இலங்கை 0.70 புள்ளிகளுடன் 181 நாடுகளில் 77ஆவது இடத்தில் உள்ளது. இது இலங்கை பெண்களின் நிலை சில துறைகளில் முன்னேற்றமடைந்திருந்தாலும், பொருளாதார வாய்ப்புகள் தொடர்பாக இன்னும் பல தடைகள் இருப்பதை காட்டுகின்றது.

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது இயற்கை வளங்கள் அல்லது மூலதனம் மட்டும் அல்ல. அந்த நாட்டின் மனித வளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதிலும் தங்கியுள்ளது. வேலை செய்யக்கூடிய வயதில் உள்ள மக்கள் தொகை பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது உற்பத்தி அதிகரிக்கிறது, வருமானம் உருவாகிறது, வரி வருவாய் அதிகரிக்கிறது மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் தொழிலாளர் படையில் உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர். பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Female Labour Force Participation Rate - FLFPR) என்பது, ஒரு நாட்டில் வேலை செய்யும் வயதில் உள்ள மொத்த பெண்களில், வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர் என்பதைக் காட்டும் பொருளாதாரக் குறியீடு ஆகும்.

தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களம் (DCS) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றின் கணிப்பின் படி இலங்கையில் 2024ஆம் ஆண்டில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 29.8 சதவீதம் மட்டுமே ஆகும். அதாவது, வேலை செய்யக்கூடிய 100 பெண்களில் சுமார் 30 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேடுகின்றனர். மீதமுள்ள பெரும்பாலான பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடவில்லை. 2017ஆம் ஆண்டில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 36.6 சதவீதமாக இருந்த நிலையில், அது 2024ஆம் ஆண்டில் 29.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி இலங்கையின் மனித மூலதனம் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு குறைவதற்கான காரணம் அவர்களிடம் திறமை அல்லது கல்வி இல்லாதது அல்ல. இலங்கையில் பெண்களின் கல்வி நிலை கடந்த பல ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், கல்வி பெற்ற பெண்களுக்குக் கூட வேலைவாய்ப்பில் சவால்கள் காணப்படுகின்றன. 2024ஆம் ஆண்டில் பெண்களின் வேலையில்லா விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது. அதேவேளை, ஆண்களின் வேலையில்லா விகிதம் 3 சதவீதமாகக் காணப்பட்டது. மேலும், உயர்தரப் பரீட்சை அல்லது அதற்கு மேல் கல்வி பெற்ற பெண்களில் வேலையில்லா விகிதம் 10.3 சதவீதமாக உள்ளது. இது கல்வி மட்டுமே போதுமானது அல்ல, பெண்கள் வேலை சந்தையில் இணைவதற்குத் தேவையான சமூக மற்றும் பொருளாதார சூழலும் உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன பெண்களின் இந்தத் தொழிலாளர் பங்களிப்பு குறைந்தடைந்தமைக்கு பிரதானமான 3 விடயங்களை அடையாளம் கண்டுள்ளன:

  1. ஊதியமில்லாத பராமரிப்புப் பணிகள்:

    பெண்கள் தொழிலாளர் சந்தையில் குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று வீட்டுப் பொறுப்புகளின் சமமற்ற பகிர்வு ஆகும். குழந்தைகளைப் பராமரித்தல், வீட்டுப் பணிகள், வயதான குடும்ப உறுப்பினர்களைப் பார்த்துக்கொள்ளுதல் போன்ற பணிகள் பெரும்பாலும் பெண்கள் மீதே சுமத்தப்படுகின்றன. இவை பொருளாதார ரீதியாக மதிப்புள்ள பணிகளாக இருந்தாலும், அவற்றுக்கு நேரடி வருமானம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, பல பெண்கள் வேலைவாய்ப்பைத் தொடர முடியாமல் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறுகின்றனர். இது ஒரு தனிநபர் பிரச்சினை மட்டும் அல்ல; நாட்டின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் பொருளாதார இழப்பாகும். ஆனால், டென்மார்க், சுவீடன், நோர்வே போன்ற நோர்டிக் நாடுகளில், குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு மட்டுமல்ல, தந்தைக்கும் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு வழங்கப்படுகிறது. இதனால் குழந்தை பராமரிப்புப் பொறுப்பு இருவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

  2. குழந்தை பராமரிப்பு வசதிகளின் குறைபாடு:

    பெண்கள் வேலைக்குச் செல்லும் முடிவில் குழந்தை பராமரிப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கையில் தரமான மற்றும் குறைந்த செலவிலான குழந்தை பராமரிப்பு மையங்கள் போதுமான அளவில் இல்லை. இதனால், குழந்தை பெற்ற பின்னர் பல திறமையான பெண்கள் வேலைவாய்ப்பை விட்டுவிடுகின்றனர். மாறாக, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளில் அரசு ஆதரவுடன் குழந்தை பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுவதால், பெண்கள் குடும்பப் பொறுப்புகளையும் தொழில் வாழ்க்கையையும் சமநிலைப்படுத்த முடிகிறது.

  3. பாதுகாப்பற்ற போக்குவரத்து:

    பெண்கள் வேலைக்குச் செல்வதில் பாதுகாப்பு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாய் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் பயணம் செய்ய வேண்டிய வேளைகளில் பாதுகாப்பு குறித்த அச்சம் காணப்படுகிறது. பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து மற்றும் பெண்களுக்கு ஏற்ற வேலை சூழல் இல்லாதது, பல பெண்களின் வேலைத் தேர்வுகளைக் குறைக்கிறது.

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு குறைவதால் ஏற்படும் மிகப்பெரிய விளைவு நாட்டின் உற்பத்தித் திறன் குறைவதாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். பொருளாதாரத்தில் அதிகமான மக்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரிக்கும். இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் சுமார் 52 சதவீதம் உள்ளனர். 2024 மதிப்பீட்டின்படி இலங்கையின் மக்கள் தொகை சுமார் 21.9 மில்லியன் ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை சுமார் 11.4 மில்லியன் ஆகும். ஆனால், இவ்வளவு பெரிய மனித வளம் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. இது நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வுகளின்படி, பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்க முடிந்தால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) சுமார் 21 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் வேலைவாய்ப்பு என்பது பெண்களின் தனிப்பட்ட முன்னேற்றம் மட்டும் அல்ல, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடு என்பதும் தெளிவாகிறது.

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்க பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் அவசியமாகின்றன. அவையாவன: குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்; குறைந்த செலவில் தரமான குழந்தை பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்; பெண்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் (இது பெண்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்); நவீன தொழில் சந்தைக்கு ஏற்ப நெகிழ்வான வேலை நேரம், தொலைதூர வேலை வாய்ப்புகள் போன்ற முறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும், குடும்பப் பொறுப்புகள் பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற பாரம்பரிய அணுகுமுறை மாற்றப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது அவசியம்.

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு குறைவது ஒரு சமூகப் பிரச்சினை மட்டும் அல்ல; அது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கியமான பொருளாதாரச் சவாலாகும். பெண்கள் வேலைவாய்ப்பில் இணைந்தால் குடும்ப வருமானம் அதிகரிக்கும், வறுமை குறையும், மனித மூலதனம் மேம்படும் மற்றும் நாட்டின் உற்பத்தித்திறன் உயரும். மகாகவி பாரதியார் கண்ட கனவு போல, பெண்கள் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்றால், அவர்களுக்குச் சமமான பொருளாதார வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பெண்களின் முன்னேற்றம் என்பது ஒரு சமூக நீதிக்கான நடவடிக்கை மட்டும் அல்ல; அது இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை முதலீடாகும்.

ஆக்கம்:- ஹபிலாஷினி யோகேஷ்வரன்

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

America வின் அடுத்த target Malacca நீரிணையா?

ஹோர்முஸ் (Hormuz) நீரிணை மூடப்பட்டதன் காரணமாக, தற்காலத்தில் உலகெங்கிலும் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. சுருக்கமாகக் கூறினால், இலங்கையில் மீண்டும் ஒருமுறை ஒதுக்கீட்டு முறை (Quota System) மற்றும் QR குறியீடு (QR System) முறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது. இந்த நெருக்கடியின் காரணமாக, இந்த ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2% வரை குறையக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. 

பொதுவாக நீரிணை என்பது, இரண்டு பெரிய கடல் பகுதிகளை ஒன்றாக இணைக்கின்ற குறுகலான, இயற்கையான நீர்ப்பாதையைக் குறிக்கும். இத்தகைய நீரிணைகளுக்குப் புவிசார் அரசியல் ரீதியாகவும், உத்தி (Strategy) ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இதன் காரணமாகவே இவை முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. சர்வதேச வர்த்தகம் மூலமாக நாடுகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற இன்றைய உலகில், வெளியுறவுக் கொள்கையில் இதொரு முக்கியமான கருவியாகத் திகழ்கிறது. அத்தகைய மற்றுமொரு முக்கியமான நீரிணைதான் மலாக்கா (Malacca) நீரிணை ஆகும். 

ஹோர்முஸ் நீரிணையைப் போலவே மலாக்கா நீரிணை குறித்தும் தற்போது அமெரிக்கா மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றது. 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் மலாய் கடற்கரையில் அமைந்திருந்த மெலாக்கா/மலாக்கா வர்த்தகத் துறைமுகத்தின் மூலமாகவே இதற்கு இப்பெயர் கிடைத்தது. 900 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நீரிணை, இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கின்ற ஒரு கடல் பாதையாகும். இதற்கு மேற்குப் பகுதியில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவும், கிழக்கில் மலேசியாவும், தெற்கில் தாய்லாந்தும் அமைந்துள்ளன. எனவே, மலாக்கா நீரிணையின் முக்கியமான எல்லை நாடுகளாக மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை விளங்குகின்றன. 

இந்த நீரிணையின் வடக்கு நுழைவாயிலில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் இந்தியாவின் அந்தமான்-நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளதால், மலாக்கா நீரிணை இந்தியாவிற்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்தியாவின் வர்த்தகத்தில் ஒரு பெரும் பகுதி இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. 

2026 மார்ச் மாதம் அமெரிக்கா, இந்தோனேசியாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதன் மூலமாக அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு இந்தோனேசிய வான்வெளியில் முன்னரை விட அதிகமாக நடமாடுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதன் விளைவாக, மலாக்கா நீரிணை வழியாக அமெரிக்காவின் கண்காணிப்புப் பணிகளையும் கட்டுப்பாட்டையும் மேலும் அதிகப்படுத்த முடியும். அமெரிக்கா ஏன் இத்தகைய ஒப்பந்தத்தைப் போட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், மலாக்கா நீரிணையின் முக்கியத்துவத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 

உலகில் உள்ள இரண்டாவது பரபரப்பான எண்ணெய் போக்குவரத்துப் பாதையாக மலாக்கா நீரிணை கருதப்படுகிறது. முதலிடத்தில் ஹோர்முஸ் நீரிணை உள்ளது. மலாக்கா நீரிணையின் அகலம் மிகக் குறைவாக உள்ள இடமே 3 கிலோமீட்டர் மட்டும்தான். கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய்களில் 22% முதல் 29% வரை இந்த மலாக்கா நீரிணை வழியாகவே செல்கிறது. அதேபோல, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளைத் தாண்டிச் செல்லும் வர்த்தகக் கப்பல்களில் 25% முதல் 30% வரை இந்த நீரிணை வழியாகவே பயணிக்கின்றன. 

வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அமெரிக்கா தற்போது போரைக் கடந்து அதற்கு மேலான ஏதோ ஒன்றிற்குத் தயாராகி வருவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். லாபமில்லாமல் எவரும் எதையும் செய்யப் போவதில்லை. ஆயுதங்களால் போர் செய்வதைக் காட்டிலும், எண்ணெய் விநியோகப் பாதைகளைத் தடுத்து, எதிரியான சீனாவின் பலத்தை உடைத்து, அவர்களை விட ஒரு படி மேலே செல்வதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அனைத்து நாடுகளுக்கும் வரி விதித்திருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெனிசூலா மற்றும் ஈரானின் மீது ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றைக் கவனிக்கும்போது, மலாக்கா நீரிணையில் தலையிடுவது சீனாவிற்கும் ஒட்டுமொத்த ஆசியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

ஹோர்முஸ் நீரிணையைப் போலன்றி, மலாக்கா நீரிணை வழியாக எண்ணெய் மட்டுமின்றி வாகனங்கள், முடிவுற்ற பொருட்கள் (Finished goods) மற்றும் குறைக்கடத்திகள் (Semiconductors) போன்றவையும் கொண்டு செல்லப்படுகின்றன. சீனாவைத் தவிர்த்து தென்கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தித் தேவையில் 80% வரை இந்த மலாக்கா நீரிணை மூலமாகவே பூர்த்தியாகிறது. இந்த நீரிணையை அளவுக்கு அதிகமாக நம்பியிருப்பது சீனாவின் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகும். எனவே, என்றாவது ஒரு நாள் இந்த நீரிணை காரணமாகத் தங்களுக்குப் பெரிய அரசியல் ஆபத்து வரும் என்பதைச் சீனா முன்னரே உணர்ந்திருந்தது. இதனைத்தான் 'மலாக்கா தர்மசங்கடம்' (Malacca Dilemma) என்று அழைக்கிறார்கள். 

ஹோர்முஸ் மற்றும் மலாக்கா ஆகிய இரண்டு நீரிணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவற்றிற்கு இடையிலான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை வைத்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். ஹோர்முஸ் நீரிணை ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையில் அமைந்துள்ளது. ஆனால் மலாக்கா நீரிணை மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் உள்ளது. முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நுழைவாயிலாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது. மலாக்கா நீரிணை ஆசியாவின் வர்த்தகத்திற்கும் எரிசக்திக்கும் ஒரு முக்கியப் பாதையாக (Energy Corridor) உள்ளது. 

எண்ணெய் போக்குவரத்தைப் பொறுத்தவரை, உலகின் மொத்த திரவ பெட்ரோலியப் பயன்பாட்டில் 20% முதல் 25% வரை ஹோர்முஸ் வழியாக நடைபெறுகிறது. அதேபோல உலகக் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் 29% மலாக்கா நீரிணை வழியாக நடைபெறுகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட அடுத்த கணமே அதன் பாதிப்பு காட்டுத்தீயைப் போல உலகம் முழுவதும் பரவியது. அதற்கு முக்கியக் காரணம், ஹோர்முஸ் நீரிணைக்குப் பதிலாகப் பயன்படுத்த வேறு மாற்று வழிகள் (Alternative routes) இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி, சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஈராக் மற்றும் கத்தார் போன்ற முக்கியமான எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல இருக்கும் ஒரே வழி இந்த ஹோர்முஸ் நீரிணை மட்டும்தான். 

மலாக்கா நீரிணை சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவின் பொருளாதாரங்களுக்கு மிக முக்கியமானது. ஒருவேளை இந்த நீரிணை மூடப்பட்டாலும் கூட, இந்தோனேசியாவின் சுண்டா (Sunda) மற்றும் லொம்போக் (Lombok) போன்ற மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த முடியும். ஆனால் அவற்றில் உள்ள சிக்கல் என்னவென்றால், அந்தப் பாதைகளில் பயணிப்பதற்கு அதிக தூரமும் நேரமும் செலவாகும். இதனால் கொண்டு செல்லப்படும் பொருட்களின் விலையும் உயரும். 

இந்த இரண்டு நீரிணைகளையும் சுற்றியுள்ள ஆபத்துகளைப் பார்க்கும்போது, ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி எப்போதும் புவிசார் அரசியல் மோதல்கள் (Geopolitical conflicts) நிலவுகின்றன. ஆனால் மலாக்கா நீரிணையில் கடல் கொள்ளையர்கள் (Piracy) மற்றும் கப்பல் போக்குவரத்து நெரிசல் (Congestion) ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த இரண்டில், ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமானது பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்பாகும். ஏனெனில் போர் அல்லது கொள்கை மாற்றங்கள் என உலகில் எங்கு என்ன நடந்தாலும், அதன் பாதிப்பு முதலில் நமது பொருளாதாரத்தையே (Pocket) பாதிக்கும். அதனால்தான் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டவுடன் உலக அளவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அதேபோல மலாக்கா நீரிணைக்கு ஏதேனும் தடை ஏற்பட்டால், அது எண்ணெய்க்கு மட்டுமின்றி ஆசியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்திற்கே ஒரு பெரிய முட்டுக்கட்டையாக அமையும். 

ஆக்கம்:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.