கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை மத்திய வங்கி தனது 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட சில முக்கிய விடயங்களை இந்த கட்டுரையின் ஊடாக சுருக்கமாக வழங்குவதே எமது நோக்கமாகும். இந்த அறிக்கை பிரதானமாக பின்வரும் காரணிகள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளது. அவை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
நாணயக் கொள்கை நிலைப்பாடு
சந்தை வட்டி வீதங்கள்
வெளிநாட்டுத் துறையின் செயல்திறன்
தனியார் துறைக்கான கடன்கள்
மேற்பரப்பு பணவீக்கம் (Headline Inflation)நிதித்துறை (Fiscal Sector)
நிதிசார் துறை (Financial Sector)
1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளையும் ஒப்பிடுகையில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Real GDP) 5% மட்டத்தில் தக்கவைத்துக் கொள்ள முடிந்துள்ளது. அதற்கமைய, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஒவ்வொரு துறைகளும் வழங்கிய பங்களிப்பை சதவீத அடிப்படையில் பார்க்கும்போது, அதிகபட்ச பங்களிப்பாக கைத்தொழில் துறை 7.8% பங்களிப்பை வழங்கியுள்ளது. ஏனைய துறைகளான விவசாயத்துறை மற்றும் சேவைத்துறை முறையே 1.4% மற்றும் 3.3% என்ற அளவில் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளன.
இந்த இரண்டு ஆண்டுகளில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Nominal GDP) வளர்ச்சி பதிவாகியுள்ளது. அதாவது, 2024ஆம் ஆண்டில் 30.1 டிரில்லியன் ரூபாவாக இருந்த பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2025ஆம் ஆண்டில் 32.8 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பு அமெரிக்க டாலர்களில், 2024ஆம் ஆண்டில் 99.6 பில்லியனாகவும், 2025ஆம் ஆண்டில் 108.8 பில்லியனாகவும் காட்டப்பட்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில் தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) 5000 அமெரிக்க டாலர்களாகக் காணப்பட்டதுடன், இது 2024ஆம் ஆண்டின் மதிப்பான 4546 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு வளர்ச்சியாகும்.
2. நாணயக் கொள்கை நிலைப்பாடு
2025ஆம் ஆண்டின் பெரும்பகுதியில், இலங்கை மத்திய வங்கியானது நடுத்தர கால விலை ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து, நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்காக ஒரு தளர்த்தப்பட்ட (இணக்கமான) நாணயக் கொள்கை நிலைப்பாட்டைப் பேணியது. இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை வட்டி வீதக் குறைப்புகளினால் உருவான குறைந்த வட்டி வீதச் சூழல், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், சந்தை நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் மற்றும் நிதி நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் உதவியது. விநியோகத் தரப்புக் காரணிகளால் பணவீக்கம் குறைந்த மட்டத்தில் காணப்பட்டதோடு, தற்காலிகமானதொரு பணவாட்ட (Deflation) நிலைக்குள்ளும் பொருளாதாரம் பிரவேசித்தது.
3. சந்தை வட்டி வீதங்கள்
2025ஆம் ஆண்டிற்குள் சந்தை வட்டி வீதங்கள் பொதுவாகக் குறையும் போக்கைக் காட்டியிருந்தன. இது தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டையும், மேம்பட்ட மா பொருளாதார (Macroeconomic) நிலைமையையும் பிரதிபலிக்கிறது. குறுகிய கால பணச் சந்தை வீதங்கள், ஒருநாள் கொள்கை வட்டி வீதத்துடன் பரந்தளவில் ஒத்துப்போனதுடன், வர்த்தக வங்கிகளின் கடன் மற்றும் வைப்பு வீதங்கள் படிப்படியாக வீழ்ச்சியடைந்தன. ஆண்டின் பிற்பகுதியில், உள்நாட்டுப் பணச் சந்தையில் அதிகப்படியான திரவத்தன்மை (Excess Liquidity) காணப்பட்டதால், அந்த உபரித் திரவத்தன்மையை உள்வாங்கி கொள்வதற்கும் குறுகிய கால வட்டி வீதங்களின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் மத்திய வங்கி மறுவிற்பனை ஏலங்களை (Reverse Repo Auctions) நடாத்தத் தூண்டப்பட்டது.
4. வெளிநாட்டுத் துறையின் செயல்திறன்
இது தொடர்பாக மிகக் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், வர்த்தக சமநிலைப் பற்றாக்குறை (Trade Deficit) விரிவடைந்துள்ளமையாகும். 2024ஆம் ஆண்டில் 6.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வர்த்தக பற்றாக்குறை, 2025ஆம் ஆண்டளவில் 7.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்துள்ளது. நாட்டிற்கு வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித் தரும் முக்கிய வழிகளில் ஒன்றான சுற்றுலாத்துறை, 2024ஆம் ஆண்டைப் போலவே 2025ஆம் ஆண்டிலும் வளர்ச்சியடைந்துள்ளது. இதன்படி, சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.06 மில்லியனிலிருந்து 2.36 மில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் பணப் பிரேஷணங்களில் (Remittances) குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டில் இருந்த 6.6 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து, 2025ஆம் ஆண்டில் 8.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் 6.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு (Gross Official Reserves), 2025இல் 6.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சியடைந்தது. இலங்கை ரூபாயின் நடத்தை 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் ஒரு பின்னடைவைக் காட்டுகிறது. அதாவது, 2024ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க டாலருக்கு 292.58 இலங்கை ரூபாய் என்ற மதிப்பு பதிவாகியிருந்த நிலையில், 2025இல் அந்த மதிப்பு ஒரு டாலருக்கு 309.99 ரூபாவாகக் குறிக்கப்பட்டது. அதற்கமைய, 2024ஆம் ஆண்டில் ரூபாய் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.7% இனால் அதிமதிப்பீட்டிற்கு (Appreciation) உள்ளாகியிருந்த நிலையில், 2025இல் அது 5.6% இனால் அவமதிப்பீட்டிற்கு (Depreciation) உள்ளாகியுள்ளது. ஒரு சாதகமான விடயமாக, 2025ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கு உபரி (Current Account Surplus) அதிகரித்தமையைக் குறிப்பிடலாம். இது 1.2 பில்லியனிலிருந்து 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான ஒரு உயர்வாகும்.
5. தனியார் துறைக்கான கடன்கள்
2025ஆம் ஆண்டில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்களில் கணிசமான விரிவாக்கம் பதிவாகியுள்ளது. குறைந்த வட்டி வீதங்கள், மேம்பட்ட வணிக மனோநிலை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பியமை என்பன இதற்குக் காரணங்களாக அமைந்தன. வருடாந்த பொருளாதார ஆய்வின்படி, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் இவ்வருடத்தில் சுமார் 2.1 டிரில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், இது வரலாற்றில் பதிவான அதிகூடிய வருடாந்த விரிவாக்கத்தைக் குறித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், வாகன இறக்குமதி உட்பட நிதியளிப்புக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக, குறிப்பாக 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் தனியார் துறைக்கான கடன் வளர்ச்சி வேகமடைந்தது. நிதி ஒருங்கிணைப்பு (Fiscal Consolidation) காரணமாக அரசாங்கத்தின் கடன் வாங்கும் தேவைகள் குறைந்தமை, வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கான கடன் வழங்கலை விரிவுபடுத்துவதற்கு வங்கிகளுக்கு அதிக இடத்தை உருவாக்கியது.
6. மேற்பரப்பு பணவீக்கம் (Headline Inflation)
2025ஆம் ஆண்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டு மட்டத்திலேயே காணப்பட்டது. கடந்த கால நெருக்கடி காலங்களில் கட்டுப்பாடின்றி மிக வேகமாக மாறுபட்டுக் கொண்டிருந்த பணவீக்கம், 2023 மற்றும் 2024 காலப்பகுதிகளில் எடுக்கப்பட்ட சரியான கொள்கை முடிவுகள் காரணமாகக் குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 2024ஆம் ஆண்டின் இறுதிக்கதியில் மறைப் பெறுமானத்தை (Negative Value) நோக்கிச் சென்ற பணவீக்கம், 2025 ஆகஸ்ட் மாதம் வரை அதே மட்டத்திலேயே நீடித்தது. எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் எதிர்பாராத விதமாகவும் அதிகரித்தமை மற்றும் ரூபாய் அவமதிப்பிற்குள்ளானமை போன்ற காரணிகளால், இலக்கு வைக்கப்பட்ட 5% பணவீக்க வீதத்தைப் பேணுவது சவாலானதாக மாறியுள்ளது.
7. நிதித்துறை
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 2024ஆம் ஆண்டில் 6.8% மட்டத்திலும், 2025இல் 2.3% மட்டத்திலும் காணப்பட்டது. அதற்கமைய, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை கணிசமான அளவில் குறைந்துள்ளமை பதிவாகியுள்ளது. முதன்மைச் சமநிலை (Primary Balance) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் உபரியைப் பதிவு செய்ததுடன், வலுவடைந்த மாகாே பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் நிதித்துறையின் செயல்திறன் மேம்பட்டது. 2024ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2% ஆக இருந்த முதன்மைச் சமநிலை, 2025இல் 5.4% வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2024இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.6% ஆக இருந்த அரசாங்கத்தின் வருமானம், 2025ஆம் ஆண்டளவில் 16.7% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் கடனிலும் சதவீத அடிப்படையில் சிறு குறைவு பதிவாகியுள்ளது. அதன்படி, 2024இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95.5% ஆக இருந்த மத்திய அரசாங்கத்தின் கடன், 2025இல் 91.6% ஆகக் குறைவடைந்துள்ளது.
8. நிதிசார் துறை
வலுவடைந்து வரும் மா பொருளாதார நிலைமைகள் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகளுக்கு மத்தியில், 2025ஆம் ஆண்டில் நிதிசார் துறை மேம்பட்ட மீளெழுச்சித் திறனை வெளிப்படுத்தியது. நெருக்கடிமிக்க ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த திரவத்தன்மை நிலைமைகள், குறைந்த நிதி அழுத்தம் மற்றும் வலுவான சந்தை நம்பிக்கை ஆகியவற்றுடன் வங்கித் துறையின் நிலைமைகள் மேம்பட்டன. இறையாண்மை இடர் (Sovereign Risk) மிதமானதாக மாறியமையும், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றமும் நிதிச் சந்தைகளின் ஸ்திரத்தன்மைக்கு மேலும் ஆதரவளித்தன. இதற்கிடையில், கடன் வளர்ச்சி மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், முறையான ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக நிதித் துறையின் மேற்பார்வை மற்றும் திரவத்தன்மை மேலாண்மை நடவடிக்கைகளை மத்திய வங்கி தொடர்ந்து வலுப்படுத்தியது. ஒட்டுமொத்தமாக, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் உள்நாட்டு கட்டமைப்பு சவால்களுக்கு மத்தியிலும் நிதி முறையானது படிப்படியாக வழமைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகளைக் காட்டியது.
சுருக்கம்
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார ஆய்வு, சமீபத்திய ஆண்டுகளில் அநுபவித்த கடுமையான மாகாே பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் படிப்படியாக ஸ்திரமடைந்து வரும் இலங்கைப் பொருளாதாரத்தின் சித்திரத்தை முன்வைக்கிறது. மேம்பட்ட நிதிச் செயல்திறன், தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகள், வலுவான வெளிநாட்டுத் துறை குறிகாட்டிகள் மற்றும் தனியார் துறை கடன்களின் மறுமலர்ச்சி என்பன கூட்டாக இந்தத் தொடர்ச்சியான மீட்சிச் செயல்முறைக்கு ஆதரவளித்தன.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, பணவீக்க அபாயங்கள் மற்றும் வெளிநாட்டு அபாயங்கள் போன்ற சவால்கள் இன்னும் நீடித்த போதிலும், 2025க்குள் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீளெழுச்சித் திறனை வெளிப்படுத்தியுள்ளது. நீண்ட காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், நீண்ட கால மா பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் தொடர்ச்சியான கொள்கை ஒழுக்கம், நிதித்துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இன்றியமையாததாக இருக்கும் என்பதே இந்த ஆய்வின் பரிந்துரையாகும்.
மொழிபெயர்ப்பு:- ச.துலாங்கன்.

