இந்த கட்டுரை ஒரு சிங்கள கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும்.
இந்தியா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்லாமல், வர்த்தகக் களத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) அது அண்மையில் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் புது டெல்லி மற்றும் பிரஸ்ஸல்ஸை தாண்டி பல தாக்கங்களை ஏற்படுத்தும். இது கொழும்பிலும் விளைவுகளை உருவாக்கும்.
பல ஆண்டுகளாக, இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் 'ஜிஎஸ்பி பிளஸ்' (GSP+) திட்டத்தினால் பயனடைந்து வந்தது. GSP+ திட்டத்தின் கீழ், இலங்கை போன்ற வளரும் நாடுகள் மனித உரிமைகள், தொழிலாளர் தரநிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக ஆட்சி முறை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்கச் செயல்படும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யும் போது பூஜ்ஜியம் அல்லது சலுகை வரி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
அந்தச் சலுகை அணுகல் ஒரு தெளிவான ஊக்கத்தை உருவாக்கியது. GSP+ அணுகல் இல்லாத இந்திய முதலீட்டாளர்கள், இலங்கையை ஐரோப்பிய சந்தைக்கான ஒரு நுழைவாயிலாகப் பார்த்தனர். ஆடை, கடல் உணவு, இறப்பர் தயாரிப்புகள் மற்றும் பல உற்பத்தித் துறைகள் நேரடியாகப் பயனடைந்தன. GSP+ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகையின் காரணமாகவே சில நிறுவனங்கள் இலங்கையைத் தேர்ந்தெடுத்தன.
ஆனால், இந்தச் சூழ்நிலை இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அணுகல்
இந்தியா இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், GSP+ இன் கீழ் இலங்கை அனுபவித்த ஒப்பீட்டு ரீதியான நன்மை அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு, எமக்கு நிகரான அல்லது முன்னுரிமை அடிப்படையிலான அணுகல் இப்போது ஐரோப்பாவிற்கு கிடைக்குமென்றால், ஒரு காலத்தில் இலங்கையைத் தனித்துவப்படுத்திய வரிச் சலுகையின் தாக்கம் குறையத் தொடங்குகிறது. ஐரோப்பிய ஒன்றிய வரி விதிப்பைப் பொறுத்தவரை, ஒரு தொழிற்சாலையை இலங்கையில் அமைப்பதற்கும் இந்தியாவில் அமைப்பதற்கும் இடையில் இனி பெரிய அளவில் வேறுபாடு இருக்காது.
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு கட்டமைப்பு ரீதியான வேறுபாடும் உள்ளது. GSP+ என்பது ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஒருதலைப்பட்சமாக வழங்கப்படும் ஒரு சலுகையாகும். அதனை எப்போது வேண்டுமானாலும் மீளப் பெறலாம். இதற்கு நேர்மாறாக, ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) என்பது இரு இறையாண்மையுள்ள அரசாங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையில் நடத்தப்பட்ட, பரஸ்பர ஏற்பாடாகும். இது வேறுபட்ட அளவிலான கணிக்கக்கூடிய தன்மை (predictability) மற்றும் சட்ட ரீதியான உறுதியைக் கொண்டுள்ளது.
இலங்கையுடன் இந்தியா கைச்சாத்திட்ட முதலாவது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 1998 இல் கையெழுத்திடப்பட்டு 2000 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த 'இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்' (ISFTA) என்பதைப் பலர் நினைவில் வைத்திருப்பதில்லை. அக்காலப்பகுதியில், இரு நாடுகளும் தமது வர்த்தகத் தாராளமயமாக்கல் பயணத்தில் ஏறக்குறைய ஒரே நிலையிலேயே இருந்தன.
அதன் பிறகு, இந்தியா தீர்க்கமான முறையில் நகர்ந்து, வளர்ச்சியடைந்து, கிட்டத்தட்ட 60 நாடுகள் மற்றும் முக்கிய பொருளாதாரக் கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தமே கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளை எடுத்துக்கொண்டது. இதற்கிடையில், இலங்கையானது பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் பின்னர் தாய்லாந்துடன் ஒப்பந்தங்களைச் செய்திருந்தாலும், இந்த ஏற்பாடுகளின் ஆழம், பயன்பாடு மற்றும் சீரான தன்மை குறித்து கேள்விகள் நீடிக்கின்றன. இந்த வளர்ச்சிப் பாதையில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு மிகவும் தெளிவாக தெரிகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அணுகல் ஏனைய உலகளாவிய தரப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வர்த்தக உறவுகள் மூலோபாய ரீதியானவை; ஒரு இடத்தில் ஏற்படும் ஒப்பந்தம் பெரும்பாலும் மற்ற இடங்களிலும் மாற்றங்களைத் தூண்டுகிறது. ஒரு பெரிய சந்தை இந்தியாவிற்குத் திறக்கப்படும்போது, மற்றவர்களும் அதைக் கவனத்தில் கொள்கிறார்கள்.
இலங்கையின் யதார்த்தம்
இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களுக்கு, சந்தை அணுகலைப் பாதுகாப்பதில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) பெறுமதியான கருவிகளாகும். ஆனால் நாம் யதார்த்தத்தையும் யோசிக்க வேண்டும்.
இலங்கையின் பொருளாதார முதுகெலும்பு பெருமளவில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை (SMEs) உள்ளடக்கியது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் பொருட்களின் பிறப்பிட விதிகள் (rules of origin), சான்றிதழ் தேவைகள் மற்றும் ஆவணப்படுத்தல்களுக்கு இணங்குவது செலவு குறைந்ததாகவும் சிக்கலானதாகவும் இருக்கும். பல சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு, இந்த நிர்வாகச் சுமையே ஒரு தடையாக மாறுகிறது. ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது என்பது தானாகவே அது பயன்பாட்டிற்கு வரும் என்று அர்த்தமாகாது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் சிறிய உள்நாட்டு நிறுவனங்களை விட பெரிய அளவிலான முதலீட்டாளர்களையே ஈர்க்கின்றன. இருப்பினும், பெரிய முதலீட்டாளர்கள் கூட வரிச் சலுகைகளுக்காக மட்டும் வருவதில்லை. அவர்கள் ஸ்திரத்தன்மை, கணிக்கக்கூடியதன்மை மற்றும் கொள்கையிலுள்ள நம்பகத்தன்மை ஆகியவற்றுக்காகவே வருகிறார்கள். ஒரு வர்த்தக ஒப்பந்தத்தால் பேரினப் பொருளாதார ஸ்திரமின்மை அல்லது ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மையை ஈடுகட்ட முடியாது.
அதனால்தான் இலங்கை மேலதிக வர்த்தக ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை எளிதாக்குதல், பரா-தீர்வை வரிகளை (para-tariffs) குறைத்தல், சுங்க நடைமுறைகளை முறைப்படுத்துதல் மற்றும் கணிக்ககூடிய வர்த்தக ஆட்சியை உருவாக்குதல் போன்ற ஒருதலைப்பட்சமான தாராளமயமாக்கல் நமக்குத் தேவை. வர்த்தகம் சார்ந்த வளர்ச்சி நமக்கு முக்கியம் எனின், வெளிப்படைத்தன்மை என்பது வெளிநாடுகளில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் மட்டும் தங்கியிருக்கக்கூடாது; அது உள்நாட்டிலும் வேரூன்றியிருக்க வேண்டும்.
கண்டிப்பாக, இலங்கைக்கு இல்லாத சில கட்டமைப்பு ரீதியான நன்மைகளை இந்தியா கொண்டுள்ளது. அது அளப்பரிய பொருளாதாரப் பரிமாணம் (scale), பரந்த தொழிலாளர் படை மற்றும் உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும் ஒரு பெரிய உள்நாட்டுச் சந்தையைக் கொண்டுள்ளது. இலங்கையிடம் அந்த அளப்பரிய பரிமாணம் இல்லை. ஆனால் அந்த யதார்த்தம் தயக்கத்திற்கான ஒரு சாக்குப்போக்கு அல்ல; அதனால்தான் நாம் உலகளாவிய வர்த்தக வலைப்பின்னல்களில் வேகமாகவும் ஆழமாகவும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
ஒரு எளிய பாடம்
ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று கணிப்புத்தன்மை ஆகும். ஆட்சி கட்டமைப்புகள் பெரும்பாலும் பலவீனமாகவும் அடிக்கடி கொள்கை மாற்றங்கள் நிகழும் இலங்கை போன்ற நாடுகளில், ஒருதலைப்பட்சமான வரி குறைப்புகள் கூட ஆட்சி மாற்றம் அல்லது அழுத்தம் கொடுக்கும் குழுக்களின் காரணமாக மாற்றியமைக்கப்படலாம். ஒரு பிணைப்பு ஒப்பந்தம் ஒழுக்கத்தை வழங்குகிறது. இது சீர்திருத்தங்களை உறுதிப்படுத்துகிறது.
தற்போதுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பரவலான தவறான கருத்துக்களும் உள்ளன. ISFTAஐ எடுத்துக்கொள்வோம். இது இந்தியாவிற்கு மட்டுமே அதிகப்படியான பலனைத் தருகிறது என்று பலர் கருதுகின்றனர். இருப்பினும், தரவுகள் மிகவும் நுணுக்கமான வேறு கதையைச் சொல்கின்றன.
2021 ஆம் ஆண்டில், இலங்கை இந்தியாவிற்கு சுமார் 815 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதில் சுமார் 525 மில்லியன் டொலர் (கிட்டத்தட்ட 64%) ISFTA சலுகைகளின் கீழ் இந்தியாவிற்குள் நுழைந்தது. அதே ஆண்டில், இலங்கை இந்தியாவிலிருந்து சுமார் 4.4 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள இறக்குமதி செய்தது, ஆனால் அதில் சுமார் 208 மில்லியன் டொலர் (5% க்கும் குறைவானது) மட்டுமே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வந்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கைக்கு வரும் பெரும்பாலான இந்திய ஏற்றுமதிகள் ISFTA சலுகைகளை நம்பியிருக்கவில்லை; அவை சாதாரண வரி விதிப்பின் கீழேயே நுழைகின்றன. மாறாக, இந்தியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதியில் கணிசமான பங்கு இந்த ஒப்பந்தத்தையே சார்ந்துள்ளது. ஏற்றுமதி என்பது இறக்குமதியை விட 'சிறந்தது' என்று ஒருவர் நம்பினால் கூட, இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்பு இலங்கைக்கு ஒரு அர்த்தமுள்ள அணுகலை வழங்குகிறது என்பது தெளிவாகிறது. இதனை நீக்குவது அல்லது பலவீனப்படுத்துவது இந்திய ஏற்றுமதியாளர்களை விட இலங்கை ஏற்றுமதியாளர்களையே அதிகம் பாதிக்கும்.
இதேபோன்ற ஒரு போக்கை பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலும் அவதானிக்கலாம்.
இந்தச் சூழலில், 'செஸ்' (cess) வரி மற்றும் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி (PAL) போன்ற மேலதிக வரிகளை நீக்கிவிட்டு, நான்கு அடுக்கு வரி கட்டமைப்பை நோக்கி நகர்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு பாராட்டத்தக்கது. இந்த முறைப்படுத்தல் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் சீர்திருத்தம் சீரானதாக இருக்க வேண்டும். வரிகளை எளிமைப்படுத்தும் அதே வேளையில், வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து விலக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளான 'எதிர்மறைப் பட்டியல்களை' (negative lists) விரிவுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். விலக்குகளை விரிவுபடுத்துவது தாராளமயமாக்கலின் நோக்கத்தையே முறியடிக்கிறது.
இந்தியா, தனது அரசியல் சொல்லாடல்களுக்கு மத்தியிலும், விவசாயம் போன்ற வரையறுக்கப்பட்ட மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட உணர்திறன் மிக்க துறைகளைத் தவிர ஏனைய பகுதிகளில் தனது பொருளாதாரத்தை படிப்படியாகத் திறந்துவிட்டுள்ளது. உண்மையில், இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அண்மையில் 'The Economist' இதழில் எழுதியுள்ளவாறு, இந்தியா உலகின் மிகவும் திறந்த முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும் விளிம்பில் இருக்கலாம்.
இலங்கையைப் பொறுத்தவரை, எமக்கான பாடம் மிகவும் எளிமையானது. வரம்புக்குட்பட்ட உள்நாட்டுச் சந்தையைக் கொண்ட ஒரு சிறிய தீவுப் பொருளாதாரத்தில், வர்த்தக சீர்திருத்தத்திற்கு நிலையான மாற்று வழி எதுவுமில்லை. பாதுகாப்புக் கொள்கை (protectionism) குறுகிய காலத்திற்கு பாதுகாப்பானதாகத் தோன்றலாம், ஆனால் தனிமைப்படுவது வாய்ப்புகளைச் சுருக்குகிறது. தயக்கம் காட்டுவது தீர்வாகாது. உலகப் பொருளாதாரத்துடன் வேகமான, ஆழமான மற்றும் முன்கணிப்பு செய்யக்கூடிய ஒருங்கிணைப்பே தீர்வாகும்.
வர்த்தகம் என்பது இலங்கைக்கு ஒரு ஆடம்பரமல்ல. அது ஒரு அத்தியாவசியம். அந்தச் சீர்திருத்தங்கள் இனி காத்திருக்க முடியாது.
