transparency international

இலங்கையில் ஊழல் குறைந்துள்ளதா?

இந்த கட்டுரை ஒரு சிங்கள கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும்.

ஊழலால் ஏற்படும் அநீதியை முடிசுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் Transparency International என்ற உலகளாவிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 2025 ஊழல் உணர்வுச்சுட்டிக்கு (Corruption Perceptions Index 2025: CPI) ஏற்ப, இலங்கை, சர்வதேச தரப்படுத்தல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டியுள்ளது. அதாவது, 181 நாடுகளில், 107வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அப்படியென்றால், இலங்கையில் ஊழல் குறைந்துள்ளதா? இந்த CPI மூலம் என்ன அளவிடப்படுகிறது? ஊழலை எதிர்த்துப் போராட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஊழல் என்பது என்ன?

யாதேனும் ஒரு நபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஊழல் என்று கருதப்படும். பல காலமாக எம்முடைய நாட்டில் நிலையற்றதன்மை, பொருளாதார சிக்கல்களின் மத்தியில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை அடிக்கடி கேட்க முடிந்தது. அதிகாரம் தவறான முறையில் பாவிக்கப்படும் போது ஏற்படும் ஊழலால் நம்பிக்கை சிதைவது மட்டுமன்றி, ஜனநாயகம் பலவீனமடைகிறது. இன்னும் எளிமையாக சொல்வதானால், பொருளாதார அபிவிருத்திக்கு தடை ஏற்பட்டு, சமத்துவமின்மை, வறுமை, சமூக பிளவு மற்றும் சூழல் நெருக்கடிகள் உண்டாகின்றன.

CPI குறியீட்டால் அளவிடப்படுவது என்ன?

CPI குறியீடு மூலம் 181 நாடுகள் எடுக்கப்பட்டு, அந்த அந்த நாடுகளில் உள்ள ஊழலின் நிலைக்கு ஏற்ப நாடுகளை நிரல்படுத்தல் நடைபெறும். இந்த குறிகாட்டியில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுக்கு ஏற்பவே நாடுகளின் தரப்படுத்தல் இடம்பெறும். அந்த வகையில், 0 முதல் 100 வரையில் புள்ளி வீச்சு உள்ளது. அதில் ஒரு நாடு எடுக்கும் புள்ளி, 0க்கு அருகில் இருக்குமாயின், அல்லது மிக குறைவான புள்ளியை பெறுமெனின், அந்த நாட்டின் அரச கட்டமைப்பு ஊழல் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று பொருள்படும். அதேவேளை, ஒரு நாட்டின் புள்ளி, 100க்கு அருகில், அல்லது, அதிகூடிய புள்ளியை பெறுமாயின், அந்நாடு, ஊழல் குறைவாக உள்ள, சுத்தமான நாடு என கருதப்படும்.

இந்த ஆண்டு குறிகாட்டியைத் தயாரிக்கும்போது ஒவ்வொரு நாட்டிலுள்ள ஊழல் தொடர்பில் பின்வரும் பல அளவுகோல்கள் கருத்தில் கொள்ளப்பட்டன: இலஞ்சம் மற்றும் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், தண்டனைக்கு பயமின்றி தனிப்பட்ட லாபத்திற்காக அரசு அலுவலகங்களைப் பயன்படுத்துதல், அரசுத் துறையில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் உள்ள திறன், ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க கூடிய அரசதுறையின் நிலைகள் மற்றும் அரச சேவையில் இடம்பெறும் உறவினர்களுக்குச் சலுகை வழங்கும் நியமனங்கள் (Nepotism).

இதற்கு மேலதிகமாக, நிர்வாகிகள் தங்கள் நிதி நலன்களை வெளிப்படுத்துமாறு உறுதிப்படுத்தும் சட்டங்கள், ஊழலைப் புகாரளிப்பவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு, குறுகிய லட்சியங்கள் மூலம் அரசைக் கைப்பற்றுதல் மற்றும் அரசுத் தகவல்களைப் பெறுவதற்கான அணுகல் போன்றவையும் அடங்குகின்றன.

2025 CPI குறிகாட்டியில் குறிப்பிடப்படும் விடயங்கள்

2025-ஆம் ஆண்டில் உலகின் ஊழல் மிகக் குறைந்த நாடாக டென்மார்க் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்காண்டிநேவிய நாடுகள் தரவரிசையின் முதல் 10 இடங்களுக்குள் பெருமளவில் உள்ளன. மிகக் குறைந்த புள்ளிகளுடன் தரவரிசையில் கீழே உள்ள நாடுகளில் தெற்கு சூடான், சோமாலியா மற்றும் வெனிசுலா ஆகியவை அடங்கும்

நாடு தரவரிசை புள்ளிகள்
டென்மார்க்  1 89
பின்லாந்து  2 88
சிங்கப்பூர்  3 84
நியூசிலாந்து  4 81
நோர்வே  4 81
ஸ்வீடன்  6 80
சுவிற்சர்லாந்து  6 80
லக்சம்பர்க்  8 78
நெதர்லாந்து  8 78
ஜெர்மனி  10 77
ஐஸ்லாந்து  10 77
மூலம்: Transparency International annual rankings

இலங்கைக்கு புள்ளிகள் வழங்கலாமா? 

கடந்த 10 வருட காலத்தில் CPI குறிகாட்டியில் இலங்கை பெற்றுக்கொண்ட புள்ளிகள் பின்வருமாறு:

வருடம் தரவரிசை புள்ளிகள்
2015 83 37
2016 95 36
2017 91 38
2018 89 38
2019 93 38
2020 94 38
2021 102 37
2022 101 36
2023 115 34
2024 121 32
2025 107 35
மூலம்: Transparency International annual rankings

இலங்கையின் புள்ளிகள் 32 முதல் 38 வரையிலான வரம்பிற்குள் இருப்பதால், ஊழல் மட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இருப்பினும், 2015 இலிருந்து 2026 வரையான காலத்திற்குள் தரவரிசையில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பொருளாதார நெருக்கடி காலத்தில் இலங்கையின் தரவரிசை மோசமாக இருந்துள்ளது. 2024இல் இலங்கை 32 புள்ளிகளுடன் 121-வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த அடிப்படையில், 2025இல் இலங்கை 14 இடங்கள் முன்னேறி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2012 ஆம் ஆண்டிலிருந்து சில நாடுகள் ஊழலைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், ஏனைய நாடுகள் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் ஒரே இடத்திலேயே தேங்கி நிற்கின்றன. கருத்தில் கொள்ளப்பட்ட 181 நாடுகள் அல்லது பிராந்தியங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையானவற்றால் 50க்கும் குறைவான புள்ளிகளையே பெற முடிந்துள்ளது. இதற்காகப் பொதுமக்களே நஷ்டஈடு செலுத்த வேண்டியுள்ளது. ஊழல் காரணமாக நிதி குறைந்த வைத்தியசாலைகள், நிர்மாணிக்கப்படாத வெள்ளப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளும் கனவுகளும் அழிந்து போயுள்ளன.

இலங்கையின் CPI தரவரிசை என்பது வெறும் எண் மட்டுமல்ல; இது முதலீட்டாளர்கள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து வழங்கப்படும் ஒரு சமிக்ஞையாகும். இலங்கையின் CPI தரவரிசையை மேம்படுத்துவது என்பது நாட்டின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதாகும். வெளிப்படையான கொள்முதல் முறை, வலுவான ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள், சுதந்திரமான நீதித்துறை மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் ஆகியவை பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நேரடியாகப் பங்களிக்கும். ஊழல் மற்றும் பலவீனமான நிர்வாக அமைப்புகளுக்குத் தீர்வுகாணாதவரை, நிலையான வளர்ச்சியை எட்ட முடியாது.

இலங்கை பொருளாதார ரீதியாக மீட்சியடைவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு சந்தர்ப்பத்தில், நிர்வாக மறுசீரமைப்பை ஒரு துணை உரையாடலாக கொள்ளக்கூடாது. அது நிலையான வளர்ச்சியின் மையப்புள்ளியாகும். உயர்ந்த CPI தரவரிசையினால் மாத்திரம் எமது பொருளாதார சவால்கள் ஒரே இரவில் தீர்ந்துவிடாது. ஆனால், ஊழல் மற்றும் நிறுவன ரீதியான பலவீனங்களுக்குத் தீர்வுகாணாத வரை நிலைமை சிறப்பாக அமையாது. எனவே, பொருளாதார ஸ்திரத்தன்மை இலக்காக இருந்தால், நிறுவன ரீதியான ஒருமைப்பாடு அதன் அடிப்படையாக அமைய வேண்டும்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.