இலங்கை - இந்தியப் பொருளாதார ஒருங்கிணைப்பும் வடக்கின் வளர்ச்சியும் வாய்ப்புகளும்!

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு பொருளாதார வளர்ச்சியை நோக்கி ஒரு திருப்புமுனையில் உள்ளது. ஏற்றுமதியை பல்வகைப்படுத்துவது முக்கியம், மேலும் இந்தியாவுடனான சமீபத்திய வர்த்தக விரிவாக்கம் ஒரு சிறந்த முதல் படியாகும். இந்தியா ஒரு உலகளாவிய வர்த்தக மையமாக வளர்ந்து வருவதால், இது உலக சந்தையில் நுழைய இலங்கைக்கு ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது. வர்த்தக தாராளமயமாக்கல் ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமல்லாமல், ஏழை மக்களுக்கும் குறைந்த விலையில் பொருட்களை நுகர வழிவகுக்கிறது, அதாவது இறக்குமதி கட்டுப்பாடுகள் இல்லாமல் அத்தியாவசிய பொருட்களை எளிதாக வாங்க முடியும்.

இலங்கை, தற்போது வர்த்தக சமநிலை சிக்கல்களையும், உயர்ந்த கடன் மட்டங்களையும் எதிர்கொள்வதால், இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் விரிவான மற்றும் வளர்ந்து வரும் சந்தை இலங்கை நிறுவனங்களுக்கு தங்கள் ஏற்றுமதியை விரிவுபடுத்தவும், உற்பத்தி செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கவும், உலகளாவிய சந்தைகளில் திறம்பட போட்டியிடவும் உதவுகிறது. இந்தியாவின் ஜி20 பொருளாதாரங்களில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கவிருப்பதாலும், இந்தியாவின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இந்தியா இலங்கைக்கு உதவக்கூடிய நிலையில் உள்ளது1. இதற்குப் பிரதியுபகாரமாக, இலங்கை தனது மூலோபாய அமைவிடம், புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மற்றும் சேவைத் துறைகளில் உள்ள வாய்ப்புகள் மூலம் இந்தியாவின் பிராந்திய மற்றும் உலகளாவிய லட்சியங்களை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க பங்காளியாக இணைய முடியும். தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களில் இந்திய முதலீடுகள் இலங்கைக்கு தேவையான அந்நிய செலாவணி வருவாயை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, திறன் பரிமாற்றத்திற்கும் வழிவகுக்கும். மேலும், இலங்கையுடன் மீள்புதுப்பிக்கத்தக்க மின் கட்டமைப்பு வாயிலாக இணைக்கும் திட்டங்கள், நாட்டின் பிற சக்தி சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கு பெரிதும் துணைபுரியும். நீண்டகால நோக்கில், போதுமான முதலீடுகள் கிடைத்தால், இலங்கை தனது கணிசமான புதுப்பிக்கத்தக்க சக்தி திறனைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் நிலையை அடைய முடியும்.

இந்தியா ஏற்கனவே இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகும். இந்தியாவின் 2030 ஆம் ஆண்டில் 700 மில்லியனை அடையவுள்ள நடுத்தர வர்க்கத்தின் நுகர்வுத் திறனை இலங்கை நிறுவனங்கள் பயன்படுத்தும் வாய்ப்பை இந்த ஒருங்கிணைப்பு உருவாக்கும். இந்தியா–இலங்கை இலவச வர்த்தக ஒப்பந்தம் (FTA) 2000 இல் அமலுக்கு வந்ததிலிருந்து, இந்தியாவுக்கான இலங்கை ஏற்றுமதிகளில் 60% க்கும் மேற்பட்டவை அதன் கீழ் நன்மை பெற்றுள்ளன. இலங்கை தனது GSP+ அந்தஸ்து கேள்விக்குறியாகும் இந்த சூழலில் இந்தியாவுடன் நேரடியாக போட்டியிடுவதை விட, இந்தியாவின் விநியோகச் சங்கிலியில் இணைந்து, இந்தியாவில் உற்பத்தி செய்ய முடியாதவற்றை செய்வதற்கு கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில், ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) ஆதரிப்பதன் மூலமும், கடன் வசதிகளை வழங்குவதன் மூலமும், வெளிநாட்டு சந்தையை கண்டறிவதன் மூலமும் ஏற்றுமதியை மேம்படுத்த முயன்று வருகிறது. ஏற்றுமதிப் பன்முகத்தன்மை மற்றும் வெளிப்புறத் துறை நிலைத்தன்மைக்கான தொடர்ச்சியான தேவையை இலங்கையின் மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

இலங்கையின் வடக்கு பகுதி, இந்தியாவின் தென்பகுதிக்கு மிக அருகில் இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, பொருளாதார ஒருங்கிணைப்பு வட மாகாண வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாகும்4. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான போரின் வடுக்கள் மெல்ல மெல்ல ஆறிவரும் நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் புவியியல் ரீதியான அண்மித்தன்மை வடக்கு மாகாணத்திற்கு ஒரு தனித்துவமான நன்மையாகும். தமிழகத்தின் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள், தென்னிந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தைக்கும், வேகமாக வளரும் பொருளாதார மையங்களுக்கும் நேரடி அணுகலைக் கொண்டுள்ளன. இது பொருட்களின் போக்குவரத்து செலவைக் குறைப்பதுடன், விநியோகச் சங்கிலிகளை திறம்பட நிர்வகிக்கவும் உதவுகிறது. 2022 இல் 4.0% ஆக இருந்த இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு, 2023 இல் 4.5% ஆக உயர்ந்துள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் காணப்பட்ட சுமார் 15-20% அதிகரிப்பு முக்கிய பங்காற்றியுள்ளது. இருப்பினும், பிற மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) பங்களிப்பிற்கான காரணங்கள் ஆழமானவை மற்றும் பன்முகத்தன்மை கொண்டவை, இது மூன்று தசாப்த கால உள்நாட்டு மோதலின் தாக்கம் ஆகும். சில தடைகள் பின்வருமாறு:

நில உரிமைப் பிரச்சினைகள்: போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்ததாலும், இராணுவக் கட்டுப்பாட்டாலும், நில ஆக்கிரமிப்பாலும் பலரின் நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளன. சமீபத்திய ஐ.நா. அறிக்கைகள் (ஜூன் 2025), வடக்கு மற்றும் கிழக்கில் நிலப் பிரச்சினைகள், குறிப்பாக அரசு சார்ந்த நிறுவனங்கள் (இராணுவம், தொல்பொருள் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம்) சம்பந்தப்பட்டவை, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன. இது விவசாயம் மற்றும் தொழில் முதலீடுகளுக்கு பெரும் தடையாக உள்ளது6.

திறமையான மனிதவள இழப்பு (Brain Drain): போரின் போதும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்பு ஏற்பட்ட புலம் பெயர்வு காரணமாக பல திறமையான தொழிலாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இதனால், பிராந்தியத்தில் நவீன தொழில்களுக்குத் தேவையான மனிதவளம் குறைவாக உள்ளது. இது குறைந்த மக்கள் தொகை அடர்த்தி மற்றும் தனியார் துறை முதலீடுகளுக்கான கவர்ச்சித்தன்மையை குறைக்கின்றன.

தனியார் முதலீட்டின் பற்றாக்குறை: குறைந்த வருமானம், குறைந்த வளர்ச்சி, மற்றும் நீண்டகால மோதலின் அபாயங்கள் காரணமாக தனியார் நிறுவனங்கள் இந்த மாகாணங்களில் முதலீடு செய்ய தயங்குகின்றன6. இதனால், பொருளாதார சுழற்சி உருவாகாமல் தடைபடுகிறது. அரசு ஊக்கங்களும் வெளிப்படையான முதலீட்டு சூழலும் அத்தியாவசியமாகின்றன.

பௌதீக குறைபாடுகள் (உட்கட்டமைப்பு): போக்குவரத்து, மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் சவால்கள் உள்ளன. சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்தில் முன்னேற்றங்கள் இருப்பினும், முக்கிய நகரங்களுக்கிடையேயான இணைப்புகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். மலிவான மின்சார விநியோகம் இன்னும் ஒரு சவாலாக உள்ளது, இது தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்களின் செயல்பாட்டுச் செலவுகளை அதிகரிக்கிறது. குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கான போதுமான வசதிகள் பல இடங்களில் இல்லை, குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நாட்டிலேயே வடக்கு மாகாணத்தில் தான் மிகக் குறைவு என அண்மைய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

தொழில் கட்டமைப்பின்மை (குறைந்த பன்முகத்தன்மை): பிராந்தியத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் வாழ்வாதார அடிப்படையிலான விவசாயம் மற்றும் மீன்பிடியைச் சார்ந்துள்ளது, இங்கு மதிப்புக் கூட்டல் குறைவாகவே உள்ளது. மேற்கு மாகாணத்துடன் ஒப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கில் உற்பத்தி மற்றும் தொழில் துறை பங்களிப்பு மிகக் குறைவு. காங்கேயன் துறை சிமெண்ட் தொழிற்சாலை போன்ற பழைய தொழிற்சாலைகளும் இன்னும் முழுமையாக இயங்கவில்லை.

மனித திறன் தேவைகள் (Skills Gap): நவீன தொழில்கள் மற்றும் சேவைத் துறைகளுக்கு அத்தியாவசியமான ஆங்கில மொழி மற்றும் கணினி பயன்பாட்டுத் திறன்கள் உள்ளூர் மக்களிடையே குறைவாக உள்ளன. பின்தங்கிய பாடசாலைகளில் போதுமான ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவே இருக்கின்றனர். ஊழல், நீண்ட கால திட்டமிடல் இல்லாமை மற்றும் வெளிப்படையான தன்மை இல்லாமை நீண்டகால, ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக இருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட சவால்கள் இருக்கும் அதே சமயத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு பல குறிப்பிடத்தக்க வாய்ப்புகளையும் கொண்டுள்ளன7:

புவியியல் காலநிலை மற்றும் இந்தியாவுடனான அணுகல்: இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுடனான அதன் ஒருங்கிணைப்பு (இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உடனான FTAகள்) இலங்கைக்கு, குறிப்பாக வடக்கு மாகாணத்திற்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இந்திய விநியோக சங்கிலிகளில் இணைவதன் மூலம், இந்தியாவிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவும், இந்தியா வழங்க முடியாத சேவைகளை வழங்கவும் இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளின் வளர்ச்சியுடன், இந்தியாவிற்கு மின்சார ஏற்றுமதி ஒரு பெரிய வாய்ப்பாக உருவாகியுள்ளது, இது பிராந்தியத்தை ஒரு மின் சக்தி மையமாக உருவாக்க வழிவகுக்கும். வரலாற்று ரீதியாக, வடக்கு கிழக்கு இந்தியாவின் தென்னிந்திய மாநிலங்களுடன் வலுவான வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தது, இந்த தொடர்புகளை மீண்டும் புதுப்பிப்பது இருதரப்பு வர்த்தகத்தை மேலும் ஊக்குவிக்கும்.

மனித வளம் (உழைப்பாளிகள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள்): வடக்கின் மக்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள், இது ஒரு பொருளாதார மறுமலர்ச்சிக்கு அவசியமான மூலதனமாகும். புலம் பெயர்ந்த தமிழர்கள் வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தூணாவர், அவர்களின் நிதி முதலீடுகள், உள்ளூர் வணிக முயற்சிகள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விவசாயத் துறைக்குத் தேவையான மூலதனத்தைப் பெருக்கும். அத்துடன், அவர்களின் தொழில்நுட்ப அறிவு, மேலாண்மை திறன்கள் மற்றும் உலகளாவிய வணிக தொடர்புகள் புதிய தொழிற்சாலைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு உதவும். இது உள்ளூர் தயாரிப்புகளுக்கு சர்வதேச சந்தைகளை அணுக வழிவகுக்கும்8. இந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, இலங்கை அரசு வெளிப்படையான முதலீட்டு சூழல், நிலப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு மற்றும் பாதுகாப்பான முதலீட்டு உறுதிப்பாடு போன்ற சரியான கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பது அவசியம்.

சுற்றுலா: வடக்கில் அபிவிருத்தி செய்யப்படாத பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன, காங்கேயன் துறை, பருத்தித்துறை துறைமுகம், முல்லைத்தீவு கடற்கரைகள், நீர் விளையாட்டு வாய்ப்புகள். மாலத்தீவு மற்றும் கரீபியன் போன்ற உயர்தர சுற்றுலா மாதிரிகளைப் பின்பற்றி, நட்சத்திரத் தரம் வாய்ந்த ஹோட்டல்கள் மற்றும் நீர் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும். இது உள்ளூர் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும்.

தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் மென்பொருள் சேவைகள்: பல IT பயிற்சி நிறுவனங்களை நிறுவுவதன் மூலமும், இலவச பயிற்சி வழங்குவதன் மூலமும், பிராந்தியம் ஒரு மென்பொருள் மேம்பாடு மற்றும் IT சேவை மையமாக மாற முடியும். தென்னிந்திய மாநிலங்களில் உள்ள IT மையங்களுடன் ஒருங்கிணைக்க இது உதவும்.

இரண்டாம் துறைகள் (Manufacturing/Industry): காங்கேயன் துறை சிமென்ட் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்ற பழைய தொழிற்சாலைகளை புதுப்பிப்பதன் மூலம் பிராந்தியத்தின் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கும். இலங்கை முதலீட்டுச் சபை (Board of Investment of Sri Lanka) வடக்கு மாகாணத்தில் புதிய தொழில் வலயங்களை (பரந்தன், காங்கேயன் துறை) உருவாக்குவதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முயற்சிக்கிறது, இது ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற உலகளாவிய அமைப்புகள், இலங்கையின் வடக்கு மாகாணம் போன்ற போரால் பாதிக்கப்பட்ட மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பசுமையான மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. 'GROW திட்டம்' இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

முடிவுரை

இலங்கையின் வடக்கு மாகாணம்  தேசிய பொருளாதாரத்தில் முழுமையாக இணைந்து, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைவதற்கான மகத்தான திறனையும், ஏராளமான வாய்ப்புகளையும் கொண்டுள்ளன. 2022 இல் 4.0% ஆக இருந்த வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) பங்களிப்பு, 2023 இல் 4.5% ஆக உயர்ந்திருப்பது, ஒரு நேர்மறையான வளர்ச்சிப் போக்கைக் காட்டுகிறது. அதிக மூலதன முதலீடு, தீவிரமான நிர்வாகச் சீர்திருத்தங்கள், ஊழலற்ற, வெளிப்படையான செயல்முறைகள், மற்றும் மக்களிடையே நீடித்த அரசியல் நம்பிக்கை ஆகியவை இதற்கான தூண்களாகும். நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, மற்றும் நிதிச் சேவைகளை எளிதாக்குவது போன்ற அடிப்படைகளை சரி செய்வதன் மூலம் வடமாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்க முடியும்.

குறிப்பாக  இந்த ஆண்டின் முதல்   காலாண்டில் இலங்கைக்கு கிடைத்த நேரடி வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 203 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 90% வளர்ச்சி ஆகும். இது போன்ற முதலுடுகளை அதிகரித்து அதனை உரியவைகையில் முகாமை செய்வதன் மூலம் மேலும் முதுலுடுகளை ஈர்க்கமுடியும் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளும்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு, இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு ஒரு முக்கிய காரணியாக அமையும். இந்தியா மற்றும் இலங்கையின் பொருளாதார ஒருங்கிணைப்பானது, வெறும் இரு நாடுகளுக்கான ஒரு வாய்ப்பாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியம் முழுவதற்குமான நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கான அடித்தளமாகவும் அமையக்கூடும். சவால்களை எதிர்கொண்டு, ஒருங்கிணைந்த நலன்களைப் பயன்படுத்துவதன் மூலம், இரு நாடுகளும் ஒரு நீடித்த கூட்டுறவைக் கட்டியெழுப்ப முடியும். இது பொருளாதார ஸ்திரத்தன்மையையும், நெருக்கமான பிணைப்புகளையும் உறுதி செய்து, தெற்காசியப் பிராந்திய ஒருங்கிணைப்புக்கான ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும்.இந்த ஒருங்கிணைப்போனது வெறுமனே இந்தியாவுடன் மட்டுமல்லாது ஏனைய  மேற்கொள்ளப்படுவதனுடாக ஏனைய நாடுகளின் சந்தையை அணுகுவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்க பெரும். வர்த்தக விரிவுபடுத்தல் ஒரு  வளர்ச்சிக்கு இன்றியமையாதது ஆகும். 

அபிஷாயினி கிருஷாந்த்