இலங்கையின் புதிய நுண்நிதிச் சட்டம் 2026: பெண்களுக்கான பாதுகாப்பா அல்லது ஒழுங்குமுறைத் தோல்வியா? 

அருள்கார்க்கி  

இலங்கையின் நுண்நிதித் துறையானது நீண்டகாலமாக வறுமை ஒழிப்பிற்கான ஒரு கருவியாகவே பார்க்கப்பட்டது. குறிப்பாக, வங்கியியல் வசதிகள் அற்ற கிராமப்புறப் பெண்களை "சிறு தொழிலதிபர்களாக" (Micro-entrepreneurs) மாற்றுவதே இதன் அடிப்படை நோக்கம். இருப்பினும், 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய இலங்கையில், நுண்நிதி என்பது ஒரு "கடன் பொறி" (Debt Trap) ஆக உருவெடுத்துள்ளது. 2026 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய ஒழுங்குமுறைச் சட்டம், இத்துறையை முறைப்படுத்த முயல்கிறது. இந்த ஆய்வானது, நுண்நிதி எவ்வாறு 'உற்பத்திக் கடன்' என்பதிலிருந்து 'நுகர்வுக் கடன்' (Consumption Debt) ஆக மாறியுள்ளது என்பதையும், புதிய சட்டத்திலுள்ள "வருமானச் சரிபார்ப்பு" (Income Verification) முறையின் அவசியத்தையும் ஆராய்கிறது. 

இலங்கையின் நுண்நிதி நெருக்கடி 

இலங்கையின் நுண்நிதித் துறையானது ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாக உருவெடுத்திருப்பது குறித்த ஆய்வுகள், அதன் கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளையே முதன்மையாகச் சுட்டிக்காட்டுகின்றன. இக்கட்டுரையானது ஏற்கனவே இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட காத்திரமான ஆய்வுகளைத் தரவுத் தளமாகக் கொண்டு, ஒரு கலப்பு ஆய்வு முறையியலை (Mixed Methods Approach) பின்பற்றுகிறது. 

இலங்கையின் நுண்நிதி நெருக்கடியின் வேர்களை ஆராய்ந்த பொருளாதார நிபுணர் W.A. விஜயவர்தன (2018), இந்தப் பிரச்சினை ஒரு 'வட்டி வீதப் பிரச்சினை' என்பதை விடவும், 'கடன் மதிப்பீட்டுப் பிரச்சினை' (Credit Assessment Failure) என்றே வாதிடுகிறார். நுண்நிதி நிறுவனங்கள் ஒரு வாடிக்கையாளரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை (Repayment Capacity) அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்யாமல், சந்தைப் போட்டியில் அதிக வாடிக்கையாளர்களைப் பிடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. இது வாடிக்கையாளர்களின் வருமானத்திற்கும் கடன் தவணைக்கும் இடையிலான சமநிலையைச் சீர்குலைத்தது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் மோசமான கடன் நிலவரம் குறித்து NGO Forum on ADB (2021) வெளியிட்ட தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதன்படி, இம்மாகாணங்களில் நுண்கடன் பெறுபவர்களில் 99 சதவீதம் பேர் பெண்கள் என்பதோடு, அவர்கள் சராசரியாக 3 முதல் 7 வெவ்வேறு நிறுவனங்களில் கடன் பெற்று ஒரு தீராத கடன் சுழற்சியில் (Multi-debt Trap) சிக்கியுள்ளதை இவ்வாய்வு உறுதிப்படுத்துகிறது. இது நுண்நிதி என்பது 'வறுமை ஒழிப்பு' என்பதிலிருந்து மாறி 'வறுமையை நிலைநிறுத்தும்' ஒரு காரணியாக மாறியுள்ளதைக் காட்டுகிறது.

இதற்கிடையில், கொள்கை ஆய்வு நிறுவனமான அட்வொக்காடா நிறுவனம் (Advocata Institute, 2020) தனது ஆய்வின் மூலம் ஒரு மாற்றுப் பார்வையை முன்வைத்தது. அரசாங்கம் வட்டி வீதங்களுக்கு உச்ச வரம்புகளை (Interest Rate Caps) விதிப்பதன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என அது எச்சரித்தது. இத்தகைய கட்டுப்பாடுகள் முறைசார் நிறுவனங்களைச் சந்தையிலிருந்து வெளியேறச் செய்யும் என்றும், அதன் விளைவாக ஏழை மக்கள் மீண்டும் எவ்வித ஒழுங்குமுறைக்கும் உட்படாத, ஆபத்தான 'கந்துவட்டிக்காரர்களிடம்' (Informal Lenders) தள்ளப்படுவார்கள் என்றும்  Advocata சுட்டிக்காட்டியது. 

இக்கட்டுரையானது மேற்கூறிய ஆய்வுப் பின்னணிகளின் அடிப்படையில், புதிய 2026 நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு ஒரு விரிவான ஆய்வு முறையியலைப் பயன்படுத்துகிறது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 2024-2025 ஆண்டு அறிக்கைகள் மற்றும் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம், நுண்நிதித் துறையின் தற்போதைய நிதி நிலைத்தன்மை மற்றும் கடன் வழங்கல் போக்குகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் அண்மைக்கால வறுமைச் சுட்டெண் (Poverty Headcount Index) மற்றும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் (CCPI) தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், பெண்களின் உண்மையான வருமானம் பணவீக்கத்தினால் எவ்வாறான சரிவைச் சந்தித்தது என்பதும், அது ஏன் அவர்களை நுகர்வுக் கடன்களை நோக்கித் தள்ளியது என்பதும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைச் சட்டம் (2026) எவ்வாறு ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட மேற்பார்வையை வழங்குகிறது என்பது சட்ட ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஆய்வு முறையியலானது, நுண்நிதித் துறையை வெறுமனே ஒரு நிதிச் சேவையாகப் பார்க்காமல், ஒரு சமூகப் பாதுகாப்பு மற்றும் கொள்கை சார் பிரச்சினையாக அணுகுவதற்கு உதவுகிறது.   

உற்பத்திக் கடன் Vs நுகர்வுக் கடன்

இலங்கையின் நுண்நிதித் துறையில் நிலவும் மிக முக்கியமான முரண்பாடு யாதெனில், வழங்கப்படுகின்ற கடன்களின் "நோக்கத்திற்கும்" (Intended Purpose) அதன் "யதார்த்தமான பயன்பாட்டிற்கும்" (Actual Utilization) இடையிலான பாரிய இடைவெளியாகும். நுண்நிதி என்பது அடிப்படையில் வருமானம் ஈட்டும் சுயதொழில்களை ஊக்குவிக்கும் 'உற்பத்திக் கடன்' (Productive Credit) ஆக வடிவமைக்கப்பட்டது. இருப்பினும், அண்மைக்காலப் பொருளாதாரத் தரவுகள் இக்கடன்கள் பெருமளவில் 'நுகர்வுக் கடன்' (Consumption Debt) ஆக மாற்றமடைந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து, பணவீக்கம் (Inflation) முன்னெப்போதும் இல்லாத வகையில் 70% வரை உயர்ந்தது (Department of Census and Statistics, 2022). இக்காலப்பகுதியில், வறிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் உண்மையான வருமானம் (Real Income) வீழ்ச்சியடைந்த நிலையில், உணவு, மருந்து மற்றும் மின்சாரக் கட்டணம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை ஈடுகட்ட பெண்கள் நுண்நிதியை நாடத் தொடங்கினர். இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 2024 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, நுண்நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்களில் 60% க்கும் அதிகமானவை 'வாழ்வாதாரச் செலவுகளுக்காகவே' பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கடனை மூலதனமாகக் கருதும் பொருளாதாரக் கோட்பாட்டிற்கு (Capital Accumulation Theory) மாறானது.

வாடிக்கையாளர்களின் கடன் வாங்கும் திறனை (Repayment Capacity) மதிப்பீடு செய்வதில் நிலவும் அறிவியல் ரீதியான பலவீனம், இந்த நுகர்வுக் கடன் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகும். W.A. விஜயவர்தன (2018) தனது ஆய்வில் குறிப்பிட்டது போல, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆதாரத்தை (Source of Income) உறுதிப்படுத்தாமல் கடன் வழங்குவது, பெண்களை மீண்டும் மீண்டும் கடன் வாங்கத் தூண்டுகிறது. 2026 ஆம் ஆண்டின் புதிய நுண்நிதிச் சட்டமானது, இந்த 'வருமானச் சரிபார்ப்பு' முறையைக் கட்டாயமாக்குவதன் மூலம், ஒரு பெண் தனது வருமானத்தில் 30% க்கும் அதிகமான தொகையை கடன் தவணையாகச் செலுத்துவதைத் தடுக்க முயல்கிறது.

NGO Forum on ADB (2021) மற்றும் Advocata  நிறுவனம் (2020) ஆகியவற்றின் கள ஆய்வுகளின்படி, ஒரு பெண் சராசரியாக 4 அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் கடன் பெற்றிருக்கும்போது, அவர் புதிய கடனைத் தனது பழைய கடனை அடைக்கவோ அல்லது அன்றாட வீட்டுச் செலவுகளுக்கோ பயன்படுத்துகிறார் (Debt Cycling). இது உற்பத்தியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, குடும்பங்களை ஒரு நிரந்தரக் கடன் சுழற்சியில் ஆழ்த்துகிறது. இந்தத் தரவுகளின் அடிப்படையில் நோக்கும்போது, நுண்நிதி என்பது தற்போது 'வறுமை ஒழிப்பு கருவி' என்பதிலிருந்து விலகி, 'அவசரக்கால நிதித் தேவை' (Emergency Liquidity) பூர்த்தி செய்யும் ஒரு கருவியாக மட்டுமே சுருங்கியுள்ளது.

வருமானச் சரிபார்ப்பு (Income Verification) மற்றும் அறிவியல் மதிப்பீடு  

நுண்நிதித் துறையில் கடன் வழங்கல் என்பது ஒரு நபர் அல்லது குடும்பத்தின் உண்மையான நிதி வலுவை அடிப்படையாகக் கொள்ளாமல், வெறும் 'நம்பிக்கை' அல்லது 'குழுப் பொறுப்பு' (Group Liability) ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பது இத்துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய கட்டமைப்பு ரீதியான சவாலாகும். 2026 ஆம் ஆண்டின் புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள 'வருமானச் சரிபார்ப்பு' (Income Verification) முறையானது, கடனை ஒரு தற்செயலான நிதி உதவியிலிருந்து அறிவியல் ரீதியான நிதிச் சேவையாக மாற்ற முனைகிறது. 

ஒரு பெண்ணின் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை (Repayment Capacity) மதிப்பிடுவதற்கு, நிதி நிறுவனங்கள் இனி 'தீர்மானிக்கப்பட்ட செலவு விகிதத்தை' (Predetermined Expense Ratio) பயன்படுத்த வேண்டும். இதற்கான ஒரு அடிப்படை ஆய்வுச் சூத்திரத்தை பின்வருமாறு வரையறுக்கலாம்:

RC = GI - (DE + IL)

இங்கு:

  • RC (Repayment Capacity): ஒரு மாதத்தில் கடனுக்காக ஒதுக்கக்கூடிய எஞ்சிய வருமானம்.

  • GI (Gross Monthly Income): குடும்பத்தின் அனைத்து வழிகளிலுமான மொத்த வருமானம்.

  • DE (Discretionary & Essential Expenses): உணவு, கல்வி, மருத்துவம் மற்றும் பணவீக்கத்தினால் ஏற்படும் மேலதிக செலவுகள்.

  • IL (Existing Indirect Liabilities): ஏற்கனவே பெற்றுள்ள ஏனைய நுண்கடன்கள் மற்றும் முறைசாரா கடன்கள்.

இந்த ஆய்வின்படி, ஒரு பெண்ணின் RC பெறுமதியில் 30% முதல் 40% வரை மட்டுமே ஒரு புதிய கடனுக்கான தவணைத் தொகையாக (EMI) நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த எல்லையைத் தாண்டும்போது, அது அக்குடும்பத்தை அத்தியாவசியத் தேவைகளைக் குறைக்கக் கட்டாயப்படுத்துகிறது, இதுவே சமூகச் சீர்குலைவிற்கு (Social Disruption) வித்திடுகிறது. 

தற்போது இலங்கையில் உள்ள பெரும்பாலான நுண்நிதி நிறுவனங்கள், கடன் தகவல் பணியகத்துடன் (CRIB) முழுமையாக இணைக்கப்படவில்லை. ADVOCATA நிறுவனம் (2020) சுட்டிக்காட்டியது போல, ஒரு வாடிக்கையாளர் எத்தனை நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார் என்ற தகவலைப் பகிர்ந்துகொள்வதற்கான 'தகவல் சமச்சீரின்மை' (Information Asymmetry) இத்துறையில் நிலவுகிறது. புதிய சட்டத்தின் கீழ், அனைத்து உரிமம் பெற்ற கடன் வழங்குநர்களும் டிஜிட்டல் முறையில் தரவுகளைப் பகிர்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். இது ஒரு பெண் தனது கடனை அடைக்க இன்னுமொரு கடனைப் பெறும் 'கடன் சுழற்சி' (Debt Cycling) முறையைத் தடுக்க உதவும்.  

பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய சூழலில், பெண்களின் வருமானம் நிலையற்றதாக (Volatile) மாறியுள்ளது. எனவே, ஒருமுறை மட்டுமே செய்யப்படும் வருமானச் சரிபார்ப்பு போதுமானதல்ல. அதற்குப் பதிலாக, 'இயக்கவியலான கடன் மதிப்பீடு' (Dynamic Credit Scoring) முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இது வாடிக்கையாளரின் கடந்தகாலச் செலுத்தல் நடத்தையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தற்போதைய சந்தை நிலைவரம் மற்றும் பணவீக்கத்தினால் அக்குடும்பத்தின் கொள்வனவுத் திறன் (Purchasing Power) எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளும். அறிவியல் ரீதியான வருமானச் சரிபார்ப்பு என்பது கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவி மட்டுமல்ல, அது வாடிக்கையாளரைப் பாதுகாப்பதற்கான ஒரு 'நிதிப் பாதுகாப்பு கவசம்' (Financial Safety Net) ஆகும். முறைசார்ந்த வருமானச் சான்றிதழ்கள் இல்லாத தற்காலிகப் பணியாளர்களாக இருக்கும் பெண்களுக்கு, அவர்களது பணப்புழக்கத்தை (Cash Flow) அடிப்படையாகக் கொண்டு கடன் மதிப்பீடுகளைச் செய்யும் நவீனத் தொழில்நுட்பங்களை (FinTech Solutions) இச்சட்டம் ஊக்குவிக்க வேண்டும். 

புதிய சட்டமூலத்தின் மீதான தர்க்கரீதியான விமர்சனங்கள்

இந்தச் சட்டத்தின் மீதான பிரதான பொருளாதார விமர்சனம் 'வட்டி வீதக் கட்டுப்பாடு' (Interest Rate Caps) தொடர்பானது. advocata நிறுவனம் (2020) மற்றும் சுதந்திரச் சந்தைப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது போல, அரசாங்கம் வட்டி வீதத்தை செயற்கையாகக் குறைக்கும்போது, நுண்நிதி நிறுவனங்கள் அதிக ஆபத்துள்ள (High-risk) கடன்களை வழங்கத் தயங்கும். இதனால், வங்கிப் பிணைகள் இல்லாத மற்றும் மிகக் குறைந்த வருமானம் கொண்ட ஏழைப் பெண்கள் முறைசார் நிதிச் சந்தையிலிருந்து (Formal Sector) வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு வெளியேற்றப்படும் பெண்கள், எவ்வித ஒழுங்குமுறைக்கும் உட்படாத சட்டவிரோத கந்துவட்டிக்காரர்களிடம் (Loan Sharks) தஞ்சம் புகுவர். இது 'நிதி உள்ளீர்ப்பை' (Financial Inclusion) நோக்கமாகக் கொண்ட சட்டமானது, நடைமுறையில் ஏழைகளை நிதி ரீதியாகத் தனிமைப்படுத்தும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது. இச்சட்டத்தில் "நுண்நிதி" என்பது "சமூக மற்றும் பொருளாதார வலுவூட்டல் நோக்கம் கொண்டது" என வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய சட்ட இடைவெளியாகும் (Legal Loophole). வர்த்தக வங்கிகள் மற்றும் பெரிய நிதி நிறுவனங்கள் தாம் வழங்கும் சிறிய அளவிலான கடன்கள் "வணிக நோக்கம்" கொண்டவை என்று வாதிடுவதன் மூலம், இந்தச் சட்டத்தின் கடுமையான ஒழுங்குமுறைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இது சிறிய அளவிலான நுண்நிதி நிறுவனங்களை மட்டுமே ஒடுக்குவதற்கும், பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமான ஒரு 'சமமற்ற ஆடுகளத்தை' (Uneven Playing Field) உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

கிராமப்புறங்களில் காலம் காலமாக இயங்கிவரும் மரணாதார சங்கங்கள், சிறிய சேமிப்பு குழுக்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் போன்றவற்றை இந்தச் சட்டத்தின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யக் கோருவது அவற்றின் தனித்துவத்தைச் சிதைக்கக்கூடும். இத்தகைய சிறிய அமைப்புகள் அதிகாரபூர்வமான கணக்காய்வு மற்றும் 'அனுமதிப்பத்திர' செலவுகளைத் தாங்க முடியாமல் முடங்கக்கூடும். கிராமப்புறப் பெண்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்த 'முறைசாரா பாதுகாப்பு வலைகளை' (Informal Safety Nets) அதிகாரத்துவப்படுத்துவது, பெண்களின் தன்னாட்சி அதிகாரத்தைப் பாதிக்கும் ஒரு தர்க்கரீதியான வலுவற்ற செயலாகும்.  இச்சட்டம் எதிர்காலக் கடன்களை ஒழுங்குபடுத்துவதில் காட்டும் ஆர்வத்தை, ஏற்கனவே கடன் பொறியில் சிக்கித் தவிக்கும் இலட்சக்கணக்கான பெண்களின் பிரச்சினையில் காட்டவில்லை. 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், வறுமை இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில், பழைய கடன்களுக்கான வட்டித் தள்ளுபடி அல்லது கடன் மீள்கட்டமைப்பு (Debt Restructuring) குறித்து இச்சட்டம் மௌனம் காக்கிறது. ஒரு முறையான 'வெளியேறும் மூலோபாயம்' (Exit Strategy) இல்லாமல் புதிய விதிகளை மட்டும் புகுத்துவது, ஏற்கனவே உள்ள சமூகப் பதற்றத்தைத் தணிக்கப் போதுமானதாக அமையாது. இலங்கை முழுவதிலும் பரந்துள்ள ஆயிரக்கணக்கான பணக்கடன் வழங்குநர்களைக் கண்காணிப்பதற்கான ஆளணி மற்றும் தொழில்நுட்ப வசதி புதிய 'அதிகாரசபையிடம்' (MCRA) உண்டா என்பது கேள்விக்குறியே. போதுமான கண்காணிப்பு வசதிகள் இல்லாமல் சட்டங்களை மட்டும் இயற்றுவது, மீண்டும் ஒரு 'முறைசாரா கருப்புச் சந்தை' உருவாகவே வழிவகுக்கும்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டமூலம் தொடர்பாக Transparency International Sri Lanka (TISL) தனது ஆழமான கவலையை வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டமானது உயர்நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட அரசியலமைப்பு முரண்பாடுகளைத் தீர்க்கத் தவறியுள்ளதோடு, நலிவடைந்த கடன் பெறுபவர்களைப் பாதுகாப்பதில் கணிசமான பின்னடைவைக் கண்டுள்ளதாக TISL சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக,புதிய சட்டமானது "நுண்கடன் வணிகம்" என்பதனை அதன் "சமூக வலுவூட்டல்" (Social Empowerment) நோக்கத்தை வைத்தே வரையறுக்கின்றது. இந்த வரைவிலக்கணத்தைப் பயன்படுத்தி பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தாம் வழங்கும் சிறிய கடன்களை "வணிக நோக்கம்" கொண்டவை எனக் கூறி, நுண்கடன் நிறுவனங்களுக்குரிய வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைத் தரநிலைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றம் தடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்த அந்தச் சமத்துவமின்மையை மீண்டும் உருவாக்குவதாக TISL எச்சரிக்கிறது.கடன் பெறுபவர் பாதுகாப்பு பற்றி சட்டம் பொதுப்படையாகக் குறிப்பிட்டாலும், வருமான சரிபார்ப்பு தரநிலைகள் (Income Verification) அல்லது வருமானத்திற்கும் கடனுக்கும் இடையிலான விகித வரம்புகள் (Debt-to-income ratios) இதில் கட்டாயமாக்கப்படவில்லை. அத்துடன், ஒழுங்குமுறை முடிவுகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான தெளிவான வழிமுறைகளும் சட்டத்தில் இல்லை.

நுண்கடன் துறையுடன் தொடர்புடைய மிரட்டல், வற்புறுத்தி கடன் அறவிடுதல் மற்றும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் இலஞ்சம் போன்ற கடுமையான துஷ்பிரயோகங்களை இந்தச் சட்டம் ஒரு ஒழுங்குமுறை மீறலாகக் கருதத் தவறியுள்ளது. இத்தகைய முறைகேடுகளுக்குக் கட்டாய அறிக்கையிடல் கடமைகளையோ அல்லது ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் தடைகளையோ இச்சட்டம் வழங்கவில்லை.முன்மொழியப்பட்டுள்ள அதிகார சபையின் நிர்வாகக் கட்டமைப்பில் நலன்சார் முரண்பாடுகளை வெளிப்படுத்தும் கட்டாயம் இல்லை. மேலும், நிதி ஆதாரங்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மை இன்மை மற்றும் தன்னிச்சையான அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பது போன்றவை ஒரு வலுவான ஒழுங்குமுறை நிறுவனத்திற்குரிய நேர்மைத் தரநிலைகளை மீறுவதாக அமைந்துள்ளன.பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய பெண்களையும் குறைந்த வருமானம் கொண்ட சமூகத்தினரையும் சுரண்டல் மற்றும் சூறையாடும் கடன் நடைமுறைகளிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள "கடுமையான தோல்வியாகவே" இந்தச் சட்டத்தை TISL கருதுகின்றது.  

நுண்நிதித் துறையின் உறுதித்தன்மைக்கான மூலோபாய நகர்வுகள்   

இலங்கையின் நுண்நிதித் துறையானது பெண்களைக் கடன் சுமையிலிருந்து விடுவித்து, அவர்களை உண்மையான பொருளாதாரப் பங்காளிகளாக மாற்றுவதற்கு வெறும் சட்ட ஒழுங்குமுறை மட்டும் போதுமானதல்ல. மாறாக, சந்தை சார்ந்து இயங்கக்கூடிய மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய காத்திரமான கொள்கை மாற்றங்கள் அவசியமாகும். 2026 ஆம் ஆண்டின் புதிய சட்டத்தின் பின்னணியில், பின்வரும் நான்கு முக்கிய கொள்கைப் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன:  

கடன்-வருமான விகிதத்தை (DTI) கட்டாயமாக்குதல் - நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது வாடிக்கையாளரின் மொத்த வருமானத்தில் கடன் தவணையானது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்ற கடன்-வருமான விகிதத்தை (Debt-to-Income Ratio - DTI) அதிகாரபூர்வமாக அமுல்படுத்த வேண்டும். குறிப்பாக, இலங்கையின் தற்போதைய உயர் பணவீக்கச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஒரு பெண்ணின் நிகர வருமானத்தில் 35 சதவீதத்திற்கு மேல் கடன் தவணைகள் அமையாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். இது 'வருமானச் சரிபார்ப்பு' (Income Verification) முறையை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்க விடாமல், நடைமுறைச் சாத்தியமான ஒன்றாக மாற்றும். 

டிஜிட்டல் கடன் தகவல் கட்டமைப்பை (Digital Credit Infrastructure) வலுப்படுத்துதல் - தற்போதுள்ள கடன் தகவல் பணியகத்தின் (CRIB) வரம்பை விரிவுபடுத்தி, அனைத்து உரிமம் பெற்ற நுண்நிதி நிறுவனங்களும் சிறிய அளவிலான கடன்களையும் உடனுக்குடன் பதிவு செய்யும் வகையில் ஒரு 'நிகழ்நேர டிஜிட்டல் தளம்' (Real-time Digital Platform) உருவாக்கப்பட வேண்டும். ADVOCATA நிறுவனம் (2020) வலியுறுத்தியது போல, தகவல் சமச்சீரின்மையை (Information Asymmetry) நீக்குவதன் மூலம் மட்டுமே ஒரு பெண் பல நிறுவனங்களில் ஒரே நேரத்தில் கடன் பெறுவதைத் தடுக்க முடியும். இது கடன் வழங்குநர்களுக்கு இடையிலான ஆரோக்கியமான போட்டியையும், கடன் பெறுபவர்களின் நிதி ஒழுக்கத்தையும் மேம்படுத்தும்.

'குழுப் பொறுப்பு' முறையிலிருந்து 'தனிநபர் மதிப்பீட்டு' முறைக்கு நகர்தல் - தற்போதைய நுண்நிதி மாதிரியில் உள்ள 'குழுப் பொறுப்பு' (Group Liability) முறையானது, கடன் செலுத்த முடியாத பெண்களைச் சமூக ரீதியாகத் தனிமைப்படுத்துவதற்கும், தற்கொலை போன்ற தீவிர முடிவுகளை எடுப்பதற்கும் தூண்டுகிறது. இதற்கு மாற்றீடாக, தனிநபரின் கடன் மதிப்பீடு (Credit Scoring) மற்றும் நுண்-காப்புறுதி (Micro-insurance) திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும். கடன் தவணைகளைச் செலுத்த முடியாத காலப்பகுதியில், அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சிதைக்காத வகையில் ஒரு 'நிதிப் பாதுகாப்பு வலை' (Financial Safety Net) இச்சட்டத்தின் ஊடாக நிறுவனமயப்படுத்தப்பட வேண்டும். 

நிதிசார் அறிவுறுத்தல் மற்றும் தொழில் முனைவோர் கல்வி (Financial Literacy & Entrepreneurship) - கடன் என்பது ஒரு மூலதனம் மட்டுமே தவிர, அது வருமானமல்ல என்ற புரிதலை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நுண்நிதி நிறுவனமும் தனது லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வாடிக்கையாளர்களின் நிதிசார் அறிவுறுத்தல் (Financial Literacy) திட்டங்களுக்குச் செலவிடுவதைக் கட்டாயமாக்கலாம். கடனை வாங்குவதற்கு முன், அதன் வட்டி கணக்கீடு மற்றும் தொழில் முதலீடு குறித்த குறைந்தபட்ச பயிற்சியைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்வதன் மூலம், 'நுகர்வுக் கடன்' (Consumption Debt) கலாச்சாரத்தை படிப்படியாகக் குறைத்து, 'உற்பத்திக் கடன்' (Productive Credit) கலாச்சாரத்தை ஊக்குவிக்க முடியும். 

பாலியல் இலஞ்சம் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான கடுமையான தண்டனைகள்- நுண்கடன் துறையில் பெண்களுக்கு எதிராகக் காணப்படும் பாலியல் இலஞ்சம், மிரட்டல் மற்றும் வற்புறுத்தி கடன் அறவிடுதல் போன்ற துஷ்பிரயோகங்களை 'ஒழுங்குமுறை மீறல்களாக' (Regulatory violations) சட்டத்தில் உள்ளீர்க்க வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமங்களை இரத்து செய்வதுடன், அவற்றுக்கு எதிராகக் கடுமையான அபராதங்களை விதிக்க வேண்டும்.அதிகாரசபையின் முடிவுகளுக்கு எதிராகக் கடன் பெறுபவர்கள் மேன்முறையீடு செய்வதற்கான தெளிவான மற்றும் எளிமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அத்துடன், சட்டப் போராட்டங்களின் போது கடன் பெறுபவர்கள் தமக்குரிய சட்டப் பிரதிநிதித்துவத்தைப் (Legal Representation) பெறுவதற்கான தடையற்ற வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.எதிர்காலத் திருத்தங்கள் அல்லது புதிய விதிமுறைகளை உருவாக்கும்போது, இறுதி நேரத்தில் அல்லாமல் ஆரம்பக் கட்டங்களிலேயே பாதிக்கப்பட்ட பெண்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று அவற்றைச் சட்ட வரைவில் ஒருங்கிணைக்க வேண்டும்.

முடிவுரை  

இலங்கையின் நுண்நிதித் துறையானது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது. 2026 ஆம் ஆண்டின் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைச் சட்டம் (MCRA Act) என்பது இத்துறையைச் சீரமைப்பதற்கான ஒரு தீர்க்கமான முயற்சியாகும். இருப்பினும், இந்த ஆய்வின் மூலம் நாம் கண்டறிந்தது யாதெனில், வெறும் சட்டவாக்கத்தினால் மட்டும் நுண்கடன் பொறி எனும் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது என்பதாகும்.பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய சூழலில், நுண்நிதி என்பது பெண்களைச் சிறு தொழிலதிபர்களாக மாற்றும் 'உற்பத்திக் கருவி' என்பதிலிருந்து விலகி, அவர்களின் அன்றாட உயிர்வாழ்வைத் தீர்மானிக்கும் 'நுகர்வுக் கடன்' ஆக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு, வட்டி வீதக் கட்டுப்பாடுகள் போன்ற மேலோட்டமான தீர்வுகளுக்கு அப்பால் நாம் நகர வேண்டும். வட்டி வீதங்களைச் செயற்கையாகக் குறைப்பது நிதி உள்ளீர்ப்பைச் சிதைப்பதோடு, ஏழை மக்களை மீண்டும் முறைசாரா கந்துவட்டிக்காரர்களிடம் தள்ளும் ஆபத்தைக் கொண்டுள்ளது என்பதை கொள்கை வகுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்த ஆய்வின் முக்கிய பரிந்துரையான 'அறிவியல் ரீதியான வருமானச் சரிபார்ப்பு' (Scientific Income Verification) மற்றும் 'கடன்-வருமான விகிதத்தை' (DTI) அமுல்படுத்துவது ஆகியவை, பெண்களின் கடன் வாங்கும் திறனை அவர்களின் வாழ்வாதாரத்தோடு ஒத்திசைக்க உதவும். அத்துடன், டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கடன் தகவல் பணியகத்தின் (CRIB) வரம்பை விரிவுபடுத்துவதன் மூலம் மட்டுமே, தகவல் சமச்சீரின்மையால் ஏற்படும் கடன் சுழற்சியைத் தடுக்க முடியும். இறுதியாக, நுண்நிதி நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், வாடிக்கையாளரின் நிதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்கும் ஒரு 'பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை' (Responsible Lending Culture) இச்சட்டம் உருவாக்க வேண்டும். கடன் என்பது பெண்களின் கழுத்தைச் சுற்றியிருக்கும் சுருக்குக் கயிறாக இல்லாமல், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கான ஏணியாக மாற வேண்டும் எனில், நிதி ஒழுங்குமுறை (Financial Regulation) என்பது சமூகப் பாதுகாப்போடு (Social Protection) கைகோர்த்துச் செயல்படுவது அவசியமாகும். அப்போதுதான், நுண்நிதி என்பது உண்மையான அர்த்தத்தில் 'அதிகாரமளித்தல்' (Empowerment) என்ற இலக்கை எய்த முடியும்.

*வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.